Published : 04 Apr 2014 11:54 AM
Last Updated : 04 Apr 2014 11:54 AM
தென் சென்னை தொகுதியில் பகுஜன் சமாஜ் மற்றும் 3 சுயேச்சை வேட்பாளர்கள் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனர்.
பகுஜன் சமாஜ் கட்சி இளைஞர் அணியின் தென் சென்னை மாவட்டத் தலைவர் வி.பாலாஜி, சின்னத்திரை நடிகை ரஜினி நிவேதா, வழக்கறிஞர் எஸ்.எஸ்.ராதா கிருஷ்ணன், செம்மஞ்சேரியில் குடியிருக்கும் ஆட்டோ ஓட்டுநர் ஆர். ரவிச்சந்திரன் ஆகியோர் வியாழக்கிழமை மனுதாக்கல் செய்தனர். தென்சென்னை தொகுதியில் இதுவரை மொத்தம் 14 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த வி.பாலாஜி கூறுகையில், ‘‘எங்கள் கட்சி 543 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. மாயாவதியை பிரதமராக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்’’ என்றார்.
சுயேச்சை வேட்பாளர் ரஜினி நிவேதா கூறுகையில், ‘‘மற்ற கட்சியினர் 40 தொகுதிகளிலும் கவனம் செலுத்தவேண்டும். எனக்கு அந்த கவலைகள் இல்லை.
என் தொகுதியில் மட்டும் கவனம் செலுத்தி வெற்றிக்காக பிரச்சாரம் செய்வேன்’’ என்றார்.
செம்மஞ்சேரி தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தில் வசிக்கும் ரவிச்சந்திரன் கூறுகையில், ‘‘நான் அதிமுக உறுப்பினர். கவுன்சிலர் என்னை மரியாதை யாக நடத்தாததால் வெளியேறி விட்டேன். தலைமை மீது கோபம் இல்லை. நான் வெற்றி பெற வாய்ப்பு இல்லை. ஆனாலும், கணிசமான வாக்குகள் பெறு வேன். வாபஸ் வாங்க மாட்டேன்’’ என்றார்.
எஸ்.எஸ்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், ‘‘இயற்கை உணவு முறை, விவசாயத்தைப் பரப்புவதே என் நோக்கம். ஒவ்வொருவரும் வீட்டில் தோட்டம் வளர்க்க வேண்டும்.
சென்னையை ‘கிச்சன் கார்டன் சிட்டி’யாக மாற்ற வேண்டும். உற்பத்தியில் அனைவரும் பங்கேற்க வேண்டும். மக்களிடையே இத்தகைய விழிப்புணர்வை ஏற்படுத்தவே போட்டியிடுகிறேன்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT