Published : 10 Oct 2014 10:20 AM
Last Updated : 10 Oct 2014 10:20 AM
தஞ்சாவூர்- திருச்சி சாலையில் வல்லம் பகுதியில் சுமார் 20 கி.மீ. சுற்றளவில் பல ஆயிரம் ஏக்கரில் சட்டவிரோதமாக பல நூறு அடி ஆழம் வரை தோண்டி விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாழ்படுத்தி வரும் செம்மண் குவாரிகளை தடை செய்ய வேண்டும், சகாயம் குழு விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொணர வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்த சிறப்புச் செய்தி ‘தி இந்து’வில் அண்மையில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் ‘தி இந்து’ வாசகரும், தமிழகத்தின் தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்களில் ஒருவருமான கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்த நா.பாஸ்கரன், தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கனிமம் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநருக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் செம்மண் குவாரி முறைகேடுகள் குறித்து விளக்கம் கேட்டுள்ளார்.
வல்லம் உள் வட்டத்தில் உள்ள 10 கிராமங்களில் செம்மண், அரளை மற்றும் கிராவல் வெட்டி எடுக்கப்படும் பரப்பு, அனுமதிக்கப்பட்ட பரப்பு மற்றும் ஆட்சியரால் அனுமதி வழங்கப்பட்ட உத்தரவுகளின் விவரம், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாழ்படுத்தியும், நிலத்தடி நீருக்கு பாதிப்பு ஏற்படுத்தியும் வரும் குவாரி உரிமையாளர்களுக்கு துணைபோகும் அலுவலர்களின் பெயர் மற்றும் பதவிகளின் விவரங்கள் என்னென்ன? என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை அவர் எழுப்பியுள்ளார்.
மாவட்ட அதிகாரிகள் குழு ஆய்வு
இந்நிலையில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் என்.சுப்பையன் உத்தரவின் பேரில், மாவட்ட வருவாய் அலுவலர் சந்திரசேகரன் தலைமையில் கோட்டாட்சியர் எஸ்.தேவதாஸ் போஸ், சுரங்கத் துறை உதவி இயக்குநர் சம்பத், பொதுப்பணித் துறை நீர்வளப் பிரிவு செயற்பொறியாளர் டி.கலைச்செல்வன், சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டுத் துறை மாவட்டப் பொறியாளர் ஏ.எஸ்.ராஜ்குமார், வேளாண் இணை இயக்குநர் ஜெ.சேகர், பஞ்சாயத்துகள் துறை உதவி இயக்குநர் கே.ராஜகுரு உள்ளிட்ட மாவட்ட அளவிலான 7 துறை அதிகாரிகளைக் கொண்ட குழுவினர் வல்லம் அருகே திருக்கானூர்பட்டி கிராமத்தில் உள்ள சிங்.துரை என்பவருக்குச் சொந்தமான குவாரியை நேற்று அளக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஆய்வு குறித்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, “ஆட்சியர் சொன்னதைச் செய்கிறோம். வேறு எதுவும் சொல்வதற்கில்லை” என்றார். தொடர் வலியுறுத்தலுக்குப் பின்னர், “இப்பகுதி விவசாயிகள் பாதிப்பு ஏற்படுவதாக ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஆய்வு செய்து வருகிறோம். இதுகுறித்த அறிக்கை 2 நாட்களில் ஆட்சியரிடம் அளிக்கப்படும்” என்றார்.
இங்குள்ள 30-க்கும் மேற்பட்ட குவாரிகளையும் ஆய்வு செய்ய வேண்டும் என விவசாயிகள் கூறுகின்றனரே என்றபோது, “இந்த குவாரியில் மட்டுமே இப்போது ஆய்வு செய்கிறோம். வேறு எதுவும் தெரிவிக்க இயலாது” என்றார். தொடர்ந்து, அக்குழுவினர் அருகில் உள்ள மற்றொரு குவாரியைச் சென்று பார்வையிட்ட பின்னர் மாலையில் புறப்பட்டுச் சென்றனர்.
விவசாயிகள் அதிருப்தி
இதையறிந்த விவசாயிகள், “சிங்.துரையின் 2 குவாரிகளை மட்டும் ஆய்வு செய்துவிட்டு குழுவினர் சென்றுவிட்டனர். இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அனைத்து குவாரிகளையும் ஆய்வு செய்து உண்மையை வெளிக்கொணர வேண்டும். அதற்கு, சகாயம் குழு மட்டும்தான் தீர்வாக இருக்கும்” என்றனர். அதிகாரிகள் குழு வருவதை அறிந்தவுடன் இப்பகுதியில் உள்ள அனைத்து குவாரிகளிலும் மண் வெட்டும் பணி நிறுத்தப்பட்டு, மண் அள்ளும் இயந்திரங்கள், லாரிகள் வெளியேற்றப்பட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
புயலைக் கிளப்பியவர் யார்?
பொள்ளாச்சி நா.பாஸ்கரன். தமிழக முன்னாள் தலைமைச் செயலரும், தற்போதைய தமிழக தலைமை தகவல் ஆணையருமான ஸ்ரீபதி, பணி ஓய்வு பெற்ற பின்னர் சென்னை நெற்குன்றத்தில் ஐஏஎஸ் அலுவலர்கள் குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு பெற்றதை தகவல் அறியும் சட்டத்தின் மூலம் வெளிக்கொணர்ந்தவர்களில் ஒருவர்.
அதேபோல, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த பிரகாஷ், தனக்குத் தானே ‘அப்பழுக்கற்ற சிறந்த அரசு ஊழியர்’ என்று பட்டம் வழங்கிக் கொண்டதை இச்சட்டத்தின் மூலம் வெளிக் கொணர்ந்து, தமிழக தலைமைச் செயலர் நடவடிக்கை எடுக்க கடிதம் எழுதியவர். தற்போது, சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட மறு நாளிலிருந்து, அந்த சிறைச்சாலையில் உள்ள கைதிகளை பார்க்க விண்ணப்பித்தவர்களின் பெயர் பட்டியலைக் கேட்டு புயலைக் கிளப்பிக் கொண்டிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT