Published : 24 Jan 2014 12:00 AM
Last Updated : 24 Jan 2014 12:00 AM
என். சின்னத்துரை (43)
சின்னத்துரை மாவட்ட ஊராட்சித் தலைவராக இருந்து வருகிறார். டி.இ.இ.இ., பட்டயப்படிப்பு படித்துள்ள சின்னத்துரைக்கு கோகுலவர்த்தினி என்ற மனைவியும், அபிஷா (5), அஸ்வின் ராஜா (3) என்ற குழந்தைகளும் உள்ளனர். சொந்த ஊர் திருவைகுண்டம் வட்டம் இடையர்காடு அருகேயுள்ள தளவாய்புரம் கிராமம். தொழில் விவசாயம். இந்து பள்ளர் வகுப்பை சேர்ந்தவர்.
இரண்டாவது முறையாக மாவட்ட ஊராட்சித் தலைவராக இருந்து வருகிறார். கடந்த 2006 முதல் 2011 வரை தமிழகத்தில் அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற ஒரே மாவட்ட ஊராட்சித் தலைவர் இவர்தான். கடந்த 2011 சட்டப்பேரவை தேர்தலின்போது முதலில் ஓட்டப்பிடாரம் (தனி) தொகுதி வேட்பாளராக சின்னத்துரை அறிவிக்கப்பட்டார். பின்னர் அந்த தொகுதி கூட்டணி கட்சியான புதிய தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டதால் சின்னத்துரை வாய்ப்பை இழந்தார்.
எஸ். முத்துக்கருப்பன் (56)
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டைச் சேர்ந்த முத்துக்கருப்பன் தற்போது பாளையங்கோட்டையில் வசித்து வருகிறார். இங்குள்ள ஜான்ஸ் கல்லூரியில் பி.ஏ., எம்.ஏ. பட்டப்படிப்புகளையும், தூய சவேரியார் கல்லூரியில் பி.எட். படிப்பையும், மதுரை சட்டக் கல்லூரியில் பி.எல். படிப்பையும் முடித்திருக்கிறார்.
அதிமுக தொடங்கிய காலத்திலிருந்தே உறுப்பினராக இருக்கும் முத்துக்கருப்பன், சட்டக் கல்லூரியில் படிக்கும் போது மாணவரணியில் பொறுப்பு வகித்திருக்கிறார். 1988-ல் திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய ஒருங்கிணைந்த மாவட்டச் செயலராகவும், 1989-ல் கட்சி பிளவுபட்டபோது ஜானகி அணியிலும் இருந்தார். பின்னர் திருநெல்வேலி மாவட்ட அதிமுக இணைச் செயலராக பொறுப்பு வகித்தார். கடந்த 4 மாதங்களுக்குமுன் திருநெல்வேலி மாநகர் மாவட்ட செயலராக நியமிக்கப்பட்டார்.
விஜிலா சத்தியானந்த் (42)
பாளையங்கோட்டையை சேர்ந்த இவர், திருநெல்வேலி மாநகராட்சி மேயராக உள்ளார். இங்குள்ள இக்னேஷியஸ் கான்வென்ட் பள்ளியில் பள்ளிப்படிப்பையும், சாராள் தக்கர் மகளிர் கல்லூரியில் பி.எஸ்.சி. கணிதம், செயின்ட் ஜான்ஸ் கல்லூரியில் எம்.எஸ்.சி. கணிதம், தூய சவேரியார் கல்லூரியில் பி.ஜி.டி.சி.ஏ. (மாலைநேர வகுப்பு), மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக தொலைநிலை கல்வி திட்டத்தில் பி.எட். படிப்புகளை படித்திருக்கிறார்.
1998 முதல் அதிமுகவில் உறுப்பினராக இருக்கும் இவர், 2006-ல் மாவட்ட மகளிரணி துணைச் செயலராகவும், 2010-ல் பொதுக்குழு உறுப்பினராகவும், 2012-ல் மாவட்ட துணைச் செயலராகவும், 2013-ல் மாவட்ட மகளிரணி செயலராகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார். 2011-ல் திருநெல்வேலி மேயர் தேர்தலில் திமுக வேட்பாளரை 24,584 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
எல். சசிகலா புஷ்பா (38)
தூத்துக்குடி மாநகராட்சி மேயராக உள்ளார் சசிகலா புஷ்பா. இவரது கணவர் டி. லிங்கேஸ்வர திலகன். சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் முதலூர் அருகேயுள்ள அடையல் என்ற கிராமம். ஒரே மகன் பிரதீப் ராஜா (15). சென்னையில் டீம் ஐ.ஏ.எஸ். அகாதெமியையும், திருநெல்வேலியில் ஜே.ஜே. இலவச ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தையும் சசிகலா நடத்தி வருகிறார். எம்.ஏ., டி.பி.ஏ. படித்துள்ள இவர், இந்து நாடார் வகுப்பை சேர்ந்தவர்.
2011 சட்டப்பேரவை தேர்தலின்போது ராதாபுரம் தொகுதி வேட்பாளராக சசிகலா புஷ்பா அறிவிக்கப்பட்டார். பின்னர் அந்த தொகுதியை தே.மு.தி.க.வுக்கு ஒதுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் வாய்ப்பை இழந்தார். இதனை ஈடுசெய்யும் வகையில் உள்ளாட்சித் தேர்தலில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு அமோக வெற்றி பெற்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT