Published : 18 Sep 2013 10:21 AM
Last Updated : 18 Sep 2013 10:21 AM
'செந்தமிழ் நாடெனும் போதினிலே… இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே…' என்று பாடிய பாரதியார் இல்லத்தின் இன்றைய நிலையைக் கேட்டால் மனம் வருந்துவீர்கள். பாரதி 10 ஆண்டுகளுக்கும் மேலாக புதுச்சேரியில் தங்கியிருந்தபோதுதான் 'குயில் பாட்டு' போன்ற பல புகழ்பெற்ற படைப்புகளை படைத்தார். பாரதி புதுச்சேரியில் வாழ்ந்த இல்லத்தைப் பார்க்க வருபவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சும். அவர் வாழ்ந்த வீடு கடந்த 5 ஆண்டுகளாக மூடிக் கிடக்கிறது.
புதுச்சேரியில் ஈஸ்வரன் கோயில் வீதியில் உள்ளது பாரதியார் வசித்த வரலாற்று புகழ்மிக்க வீடு. புதுச்சேரி அரசு பாரதியார் வாழ்ந்த இல்லத்தை அருங்காட்சியகமாகவும் நூலகமாகவும் பராமரித்து வந்தது. இந்த நினைவில்லத்தில் பாரதி, புதுச்சேரியில் தங்கியிருந்தபோது எழுதிய கவிதைகளின் கையெழுத்துப் பிரதிகள், ஆவணங்கள் எல்லாம் அரிய பொக்கிஷங்களாக பாதுகாக்கப்பட்டன. பார்வையாளர்கள் தினமும் வந்து பார்வையிடும் வகையில் இருந்த இந்தப் பழமையான நினைவு இல்லக் கட்டடத்தில், 5 ஆண்டுகளுக்கு முன் விரிசல் விழ ஆரம்பித்தன.
அதையடுத்து பாரதியார் இல்லத்தைப் புதுப்பிக்க புதுச்சேரி அரசு திட்டமிட்டது. அதற்கான பணிகள் தொடங்கப்படும் என்று கடந்த 2009-ஆம் ஆண்டு அரசு சார்பில் சொல்லப்பட்டு, கட்டடத்தைப் புதுப்பிக்கும் பணி காரணமாக பாரதியார் இல்லம் தற்காலிகமாக மூடப்பட்டது. அங்கு பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்ட 17,000 புத்தகங்கள் மற்றும் ஆவணங்கள், பாரதியாரின் கையெழுத்துப் பிரதிகளில் 3,000 மட்டும் பாரதிதாசன் அருங்காட்சியகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன. அதன் பிறகு அவை அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு சுப்பையா நினைவு நூலகத்துக்கு மாற்றப்பட்டன. ஆனால், 5 ஆண்டுகளாகியும் பராமரிப்புப் பணிகள் தொடங்கப்படவே இல்லை. புதுச்சேரி வரும் சுற்றுலாப் பயணிகள், ஆய்வாளர்கள், மாணவர்கள் பாரதியார் நினைவில்லத்தைப் பார்வையிட முடியாத அளவுக்கு பாரதியார் இல்லம் மூடிக்கிடப்பது புதுச்சேரி மக்களின் மனக்குறையாகவே இருக்கிறது.
இது தொடர்பாக பாரதிதாசனின் பேரன் கலைமாமணி பாரதியிடம் கேட்டதற்கு, “புதுச்சேரிக்கு பாரதியார் வந்த பிறகுதான் மிக மிக முக்கியமான பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு உள்ளிட்ட படைப்புகளைப் படைத்தார். பாரதியார் வாழ்ந்த இல்லத்தை உடனடியாகப் புதுப்பித்து, பார்வையாளர்களுக்குத் திறந்துவிடச் சொல்லி பல அதிகாரிகளிடமும் ஆட்சியாளர்களிடமும் கோரிக்கை வைத்தோம். ஆனால் எவரும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. பேருக்குத்தான் பாரதியைப் பற்றி பெருமையாக வெளியில் பேசுகிறார்கள், ஆனால் செயல்படுவது இல்லை. பாரதியார் இல்லத்தை முழுவதுமாக இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டாமல், அதன் பழமை மாறாமல் பாதுகாப்பாகக் கட்டித்தர வேண்டும் என்பதுதான் 'இண்டாக்' போன்ற அமைப்புகளின் கோரிக்கை. ஆனால், புதுச்சேரி பொதுப்பணித் துறையோ இடித்துவிட்டு அதேபோல புதிதாகக் கட்டலாம் என்கிறது. இந்த இழுபறியும் காலதாமதத்துக்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.
புதுச்சேரி அருகே கடலூர் சிறையில் பாரதி கைது செய்யப்பட்டு 25 நாட்கள் இருந்தார். அந்த இடத்தில் ஒரு பாரதி சிலை வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. 25 நாட்களே சிறையில் இருந்த இடமே நன்றாக பராமரிக்கப்படும் நிலையில், 10 ஆண்டுகள் பாரதி வாழ்ந்த இல்லத்தைப் பராமரிக்காமல் மூடியே வைத்திருப்பது வரலாற்று துரோகம்” என்றார்.
இதுகுறித்து, புதுச்சேரி கலைப் பண்பாட்டுத்துறை இயக்குநர் மலர் கண்ணனிடம் விசாரித்தபோது, “பாரதி இல்லத்தை அதன் பழைமை மாறாமல் அப்படியே சீரமைக்க ரூ.99 லட்சம் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அதற்கானப் பணிகள் தொடங்கப்படும்” என்றார். சுதந்திரத்தைப் பாடிய கவிஞனின் நினைவில்லத்தை சுதந்திரமாகச் சுற்றிப் பார்க்கக் காத்துக்கிடக்கிறது புதுச்சேரி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT