Published : 29 Nov 2013 09:11 AM
Last Updated : 29 Nov 2013 09:11 AM
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடர்பான தொடர் விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மனுவை, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு தற்போது வேலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் தாக்கல் செய்துள்ளார்.
“ஜெயின் கமிஷன் விசாரணை அறிக்கையைத் தொடர்ந்து ராஜீவ்காந்தி கொலை சம்பவம் தொடர்பான சதித் திட்டத்தில் ஈடுபட்டு, இதுவரை விசாரணைக்கு உட்படுத்தப்படாத அத்தனை நபர்கள் குறித்தும் விசாரிப்பதற்காக பல்நோக்கு விசாரணை ஒழுங்கு முகமை அமைக்கப்பட்டது.
சி.பி.ஐ. அமைப்பின் கீழ் செயல்படும் இந்த முகமை தனது புலன் விசாரணையை சரிவர நடத்தவில்லை.இதனால் ராஜீவ்காந்தி கொலையில் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்ப டவில்லை.
புலன் விசாரணை முறையாக நடத்தப்பட்டால் ராஜீவ்காந்தி கொலைக்கு காரணமான உண்மையான சதிகாரர்கள் கண்டறியப்படுவார்கள்.
ஆகவே, சதித் திட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து முறையாக புலன் விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிடுவதோடு, அந்த புலன் விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும்” என்று அந்த மனுவில் பேரறிவாளன் கோரியுள்ளார்.
இந்த மனு சென்னையில் உள்ள தடா வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி என்.தண்டபாணி முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது வழக்கறிஞர்கள், சி.பி.ஐ. அதிகாரிகளைத் தவிர மற்றவர்கள் நீதிமன்றத்தின் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
விசாரணைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் தடா என்.சந்திரசேகரன், இந்த வழக்கில் டிசம்பர் 10-ம் தேதி நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கவுள்ளதாகத்தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT