Published : 08 Oct 2014 11:16 AM
Last Updated : 08 Oct 2014 11:16 AM
மெட்ரோ ரயில் பாதையில் செயல்படுத்தப்படவுள்ள அதிநவீன சிக்னல் தொழில்நுட்பத்தை ஜெர்மன் நாட்டு நிபுணர்கள் ஆய்வு செய்தனர். நடுவழியில் திடீரென ரயில் நின்றுவிட்டால், பின்னால் வரும் ரயில் குறிப்பிட்ட தொலைவில் தானாகவே நிற்கும் வகையில் இந்த அதிநவீன தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. முதல்கட்டமாக கோயம்பேடு – ஆலந்தூர் இடையே 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு பறக்கும் பாதையில் மெட்ரோ ரயில் போக்குவரத்தைத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான சோதனை ஓட்டம், படிப்படியாக நடந்துவருகிறது.
இதற்கிடையே, உத்தரப்பிரதேசம் லக்னோவில் உள்ள இந்தியன் ரயில்வே ஆராய்ச்சி, வடிவமைப்பு மற்றும் தரத்துக்கான அமைப்பின் (ஆர்.டி.எஸ்.ஓ.) அதிகாரிகள் குழு, 15 நாள் முக்கிய சோதனைகளை நடத்தி முடித்தது. அதையடுத்து இறுதிக்கட்ட சோதனைக்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் எஸ்.கே.மிட்டல் வரவுள்ளார். இதற்காக, பெங்களூரில் உள்ள அவரது அலுவலகத்துக்கு மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் நேரில் சென்று 15 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களை வழங்கியுள்ளனர். அவற்றை ஆய்வு செய்யும் பணி நடந்துவருகிறது.
இந்நிலையில், மெட்ரோ ரயில் சோதனை ஓட்டத்தில் முக்கியமானதாகக் கருதப்படும் ‘சிக்னல்’ சோதனையை சீமென்ஸ் கம்பெனியின் ஜெர்மன் நாட்டு நிபுணர்கள் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மெட்ரோ ரயில் சோதனை ஓட்டத்தில் மிக முக்கியமானது ‘சிக்னல்’ சோதனைதான். சென்னை மெட்ரோ ரயில் சிக்னலை சீமென்ஸ் கம்பெனி உலகத் தரத்தில் அமைத்துள்ளது. இந்த கம்பெனியே நிபுணர்களைக் கொண்டு சிக்னல் செயல்பாட்டை ஆய்வு செய்து ‘இண்டிபெண்டன்ட் சிக்னல் அசெஸர்’ (ISA) சான்று வழங்க வேண்டும். இதற்காக ஜெர்மன் நாட்டு நிபுணர்கள் கோயம்பேடு – ஆலந்தூர் இடையே ரூ.200 கோடி செலவில் அதிநவீன தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டுள்ள சிக்னல்களை முதல்கட்டமாக ஆய்வு செய்துள்ளனர்.
தற்போது ஜெர்மனுக்கு சென்றுள்ள நிபுணர் குழுவினர், மீண்டும் சென்னை வந்து தண்டவாளம் மற்றும் ரயில் இன்ஜினில் உள்ள மென்பொருள் தொழில்நுட்பத்தை சோதனை செய்ய உள்ளனர். இந்த குழுவில் இடம்பெற்றுள்ள அனைவரும் ஐரோப்பியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிநவீன தொழில்நுட்பம்
முன்னால் செல்லும் மெட்ரோ ரயில், திடீரென நடுவழியில் நின்றுவிட்டால், அதன்பின்னால் வந்து கொண்டிருக்கும் ரயில் குறிப்பிட்ட தொலைவில் தானாகவே நின்றுவிடும் வகையில் அதிநவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இன்ஜின் டிரைவர் கவனக்குறைவாக தவறு செய்தால்கூட, சிக்னல் நவீன தொழில்நுட்பத்தில் ரயில் தானாகவே நிற்கும் வகையில் மென்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளது.
சிக்னல் சோதனையை முழுமையாக முடித்து அடுத்த மாதம் 15-ம் தேதிவாக்கில் ‘ஐஎஸ்ஏ’ சான்றை சீமென்ஸ் நிறுவனம் வழங்கும். அதை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மிட்டலுக்கு அனுப்பி வைப்போம். எல்லா ஆவணங்களையும் முழுமையாக ஆய்வு செய்த பிறகே, மெட்ரோ ரயில் இறுதிக்கட்ட சோதனைக்கு மிட்டல் வருவார். அடுத்த மாத இறுதியில் அவர் சோதனை மேற்கொள்வார் என்றும் டிசம்பர் முதல் வாரத்தில் அனுமதி சான்றிதழ் வழங்குவார் என்றும் எதிர்பார்க்கிறோம். பொங்கல் திருநாளில் (ஜனவரி 15) கோயம்பேடு – ஆலந்தூர் இடையே பறக்கும் பாதையில் முதலாவது மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கி வைக்கப்படும்.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT