Published : 26 Apr 2017 12:43 PM
Last Updated : 26 Apr 2017 12:43 PM
தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை ஒட்டிய மதுபானக் கடைகளை ஏப்ரல்1-ம் தேதிக்குள் மூடவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து தமிழகமெங்கும் ஆயிரக் கணக்கான மதுபானக்கடைகள் மூடப்பட்டன. இந்த மதுபானக் கடைகளை திறக்க ஏதுவாக தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை ஊரகச் சாலைகளாக மாற்றும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டது.
இதுதொடர்பான வழக்கில், மறு உத்தரவு வரும் வரையில் மூடப்பட்ட மதுபான கடைகளை திறக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
டாஸ்மாக் கடைகள் படிப்படியாக மூடப்பட்டு வரும் நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 11-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை குடிபோதையில் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் வழக்கு பதிவு செய்த விவரங்கள் பின்வருமாறு:
திருவெண்ணைநல்லூர் அருகே சுந்தரேசபுரத்தைச் சேர்ந்த நாராயணசாமி, குடிபோதையில் குருணை மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கள்ளக்குறிச்சி அருகே சன்னியாகுப்பத்தைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் குடிபோதையில் பூச்சிமருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
விக்கிரவாண்டி கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவர் குடித்துவிட்டு வந்ததை குடும்பத்தார் கண்டித்ததை அடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சின்னசேலம் அருகே சிறுவாக்கூரை சேர்ந்த சுரேஷ் என்பவர் குடித்துவிட்டு வந்ததை கண்டித்ததால் எலி பேஸ்டை சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
திண்டிவனம் அருகே ஒலக்கூரை சேர்ந்த ஏழுமலை என்பவர் மதுவுக்கு அடிமையானவர். இனி மது அருந்தக் கூடாது என மருத்துவர்கள் எச்சரித்த நிலையிலும் மது அருந்தியதால் உடல் நலன் குறைந்து உயிரிழந்துள்ளார்.
செஞ்சி அருகே வரிக்கலைச் சேர்ந்த மண்ணாங்கட்டி குடிபோதையில் திண்ணையிலிருந்து புரண்டு விழுந்து காயமடைந்து உயிரிழந் துள்ளார். வானூர் அருகெ திருவக்கரையைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் குடித்துவிட்டு வந்ததை குடும்பத்தினர் தட்டிக் கேட்டதால், விரக்தியில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இப்படியாக விழுப்புரம் மாவட்டம் முழுவதும் கடந்த 10 நாட்களில் 8 பேர் இறந்ததாக போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவையெல்லாம் முறையாக காவல்நிலையங்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு வழக்குப் பதிவானவை. புகார் எதுவும் தராமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக கிராமப் பகுதிகளில் மதுவால் இறப்பவர்களின் எண்ணிக்கை தனி என்கிறார்கள் மதுவிற்கு எதிராக போராடும் சமூக ஆர்வலர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT