Published : 01 Mar 2014 09:50 AM
Last Updated : 01 Mar 2014 09:50 AM
திண்டுக்கல் தொகுதியில் 2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிட்டு 1 லட்சத்து 740 வாக்குகள் பெற்றதால், இந்த முறை இத்தொகுதியில் தேமுதிக போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. அக்கட்சி சார்பில் எல்.கே.சுதீஷ் போட்டியிடுவார் என அக்கட்சியினர் உறுதியாகத் தெரிவிக்கின்றனர்.
மக்களவைக்கு தேர்தல் தேதி, கூட்டணி தொகுதி பங்கீடு முடியும் முன்பே அதிமுக முதல் ஆளாக 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டது. தேமுதிக எந்த கூட்டணியில் இடம்பெறும் என்ற "சஸ்பென்ஸ்' நீடித்ததால் திமுக, காங்கிரஸ் மற்றும் பாஜக.வினர் ஒரு முடிவுக்கு வர முடியாமல் தவித்தனர். தற்போது பாஜகவுடன் தேமுதிக கூட்டணி சேருவது உறுதியாகியுள்ளதாக இரு கட்சிகளின் தரப்பிலிருந்தும் சமிக்ஞைகள் வரப்பெற்றுள்ள நிலையில் தொகுதி பங்கீடில்தான் இழுபறி நீடிப்பதாகக் கூறப்படுகிறது. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் தேமுதிக திண்டுக்கல் தொகுதியை, விருப்பமுள்ள தொகுதிப் பட்டியலில் முதல் தொகுதியாக குறிப்பிட்டிருந்ததாகவும், அதற்கு பாஜக தரப்பில் ஒப்புக்கொண்டதாகவும் கூறப் படுகிறது.
இந்தத் தொகுதியில் தேமுதிக சார்பில் விஜயகாந்த் மைத்துனர் எல்.கே.சுதீஷ் போட்டியிட உள்ளதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து தேமுதிக நிர்வாகிகள் கூறுகையில், "திண்டுக்கல் தொகுதியில் கடந்த 2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தேமுதிக கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட்டு ஒரு லட்சத்து 740 வாக்குகள் பெற்றன. அதுவும் தேமுதிக வேட்பாளராகப் போட்டியிட்ட முத்துவேல்ராஜ், வெளியூர்காரர். தொகுதி மக்களுக்கும், கட்சியினருக்கும் அறிமுகம் இல்லாத நிலையில், அவருக்கே இவ்வளவு வாக்குகள் கிடைத்தன. தற்போது பாமக, மதிமுக, பாஜக மற்றும் சில கட்சிகளுடன் இணைந்து கூட்டணி பலத்துடன் போட்டியிட உள்ளதால் வெற்றி நிச்சயம் என்கின்றனர் தேமுதிக.வினர். அதிமுக வேட்பாளர் மீது அக்கட்சியினருக்கே திருப்தியில்லை. திமுக இந்த தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டவில்லை. காங்கிரஸ் தனித்து போட்டியிட்டால் அக்கட்சியால் வெற்றிபெற முடியாது என்கிற தற்போது நிலவுகிறது.
அதனால், திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட ஆரம்பத்தில் பிரேமலதா ஆர்வம் காட்டினார். தற்போது அவர் தேர்தல் பிரச்சாரத்துக்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல வேண்டியிருப்பதால் அவர் போட்டியிடும் முடிவில் இருந்து விலகியுள்ளார்.
ஆதலால் அவருக்கு பதில் எல்.கே.சுதீஷ் போட்டியிட உள்ளார். எல்.கே.சுதீஷ் முதலில் கள்ளக்குறிச்சியில் போட்டியிட திட்டமிட்டிருந்தார். இந்திய ஜனநாயகக் கட்சி கேட்கும் ஓரே தொகுதி கள்ளக்குறிச்சி.
அதனால் திண்டுக்கல் தொகுதியில் எல்.கே.சுதீஷ் போட்டியிடுவது உறுதியாகி யுள்ளது” என்கின்றனர் தே.மு.தி.க. நிர்வாகிகள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT