Published : 17 May 2017 11:26 AM
Last Updated : 17 May 2017 11:26 AM

மின்னணுவியல் படித்து விட்டு இயற்கை அங்காடி நடத்தும் நெல்லை இளைஞர்: வீடு தோறும் பாரம்பரிய உணவுப் பழக்கத்துக்கு வித்திடுகிறார்

பாரம்பரிய உணவுப் பழக்கத்தை வீடு தேடி மக்களிடம் கொண்டு செல்லும் விதமாக நடமாடும் இயற்கை அங்காடி நடத்தி கவனத்தை ஈர்த்து வருகிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த இளைஞர்.

திருநெல்வேலி, காமாட்சி நகரை சேர்ந்தவர் தேவர்பிரான்(33). மின்னணுவியல் பாடப் பிரிவில் பட்டயப்படிப்பு முடித்துள்ள இவருக்கு, சிறு வயதிலிருந்தே இயற்கையின் மீது தீராத பாசம். தனது குழந்தைக்கு ஆரோக்கியமான உணவு கொடுக்க வேண்டும் எனத் தேடி அலைந்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

பாரம்பரியம் மிக்க சத்தான உணவு வகைகள் மக்களை விட்டு, வெகுதூரம் விலகிச் சென்று விட்டதும், துரித உணவு கலாச்சாரத்தில் மக்கள் சிக்கிக் கொண்டதும் தெரிய வந்தது,. இதுகுறித்த தேடலில் அவர் ஈடுபட்டபோது, இன்று பெருக்கெடுத்துள்ள நோய்களுக்கு உணவுப் பழக்கமே காரணம் என்று உணர்ந்தார். இயற்கை விவசாயத்தின் மகிமையை பரப்புவதை தனது பணியாக மாற்றினார். இதற்காக நடமாடும் இயற்கை வேளாண் பொருட்கள் அங்காடியைத் தொடங்கினார்.

ஆத்மார்த்தமான சேவை

இதுகுறித்து தேவர் பிரான் கூறும்போது, ‘‘வருமானத்துக்காக மட்டும் இயற்கை அங்காடியை நடத்த முடியாது. இது ஒரு ஆத்மார்த்தமான சேவை. அந்த உணர்வோடே செயல்படுகிறேன். இன்று தெருவுக்குத் தெரு துரித உணவுக் கடைகளும், மருத்துவமனைகளும் வந்து விட்டன. உணவு கலாச்சாரத்தில் திரிபு ஏற்பட்டதே இதற்கு காரணம்.

இதிலிருந்து பாரம்பரியமான உணவுப் பழக்கத்துக்கு மக்களைத் திருப்ப வேண்டும் என்பதற்காக திருநெல்வேலி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு அலைந்து திரிந்து மிகச் சிறந்த இயற்கை விவசாயிகளை தேர்வு செய்தேன்.

நெல்லையில் 18 பேர், சிறுதானிய சாகுபடிக்காக விருதுநகர் மாவட்டத்தில் இருவர் என மொத்தம் 20 இயற்கை விவசாயிகள் உள்ளனர். இவர்களிடம் இருந்து மட்டுமே காய்கறிகள், பழ வகைகள், சிறுதானியங்களை கொள்முதல் செய்கிறேன். வாரத்தில் ஞாயிறு நீங்கலாக, மற்ற 6 நாட்களும் சுழற்சி முறையில் நெல்லை மாநகரப் பகுதி முழுவதும் இந்த நடமாடும் இயற்கை அங்காடி வாகனம் செல்லும். சனிக்கிழமை மட்டும் தூத்துக்குடி மில்லர்புரம் பகுதியில் இந்த வாகனம் நிறுத்தப்படும்.

மன நிறைவு

பொதுவாக இயற்கை அங்காடி என்பது நிலையாக ஒரு இடத்தில் இருக்கும். நான் மக்களின் இருப்பிடத்தை தேடி ஆரோக்கியத்தை கொண்டு செல்லவே இதைச் செய்கிறேன். கம்பு, சோளம், ராகி, குதிரைவாலி உள்ளிட்ட சிறுதானியங்களுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இயற்கையின் மகிமையை அவர்கள் இப்போது உணரத் தொடங்கியுள்ளனர். நான் படித்த துறையில் வேலைக்கு சென்றிருந்தால் இதை விட கூடுதலான வருவாய் எனக்கு கிடைத்திருக்கும். ஆனால், இப்போதுள்ள மனநிறைவு கிடைத்திருக்காதே” என்றார் அவர்.


தேவர்பிரான்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x