Published : 21 Jan 2017 10:13 AM
Last Updated : 21 Jan 2017 10:13 AM
கடந்த 3 ஆண்டுகளாக பல்கலைக் கழகம், கல்லூரிகளில் நடக்கும் ஆராய்ச்சிகளுக்கு நிதி ஒதுக்கீடு தாமதமாவதால் பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் ஆராய்ச்சியை தொடர முடியாமல் பாதியிலேயே கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 45 மத்திய அரசு பல்கலைக்கழகங்கள், 318 மாநில அரசு பல்கலைக்கழகங்கள், 37,204 அரசு கல்லூரிகள் உள்ளன. இந்த பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் நடைபெறும் ஆராய்ச்சிகளுக்கு, பல்கலைக்கழக மானியக் குழு நிதி ஒதுக்குகிறது. இதில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம், உயிரி தொழில்நுட்பத் துறை நிறுவன ஆராய்ச்சிகளுக்கு அதிக அளவு நிதி ஒதுக்கப்படுகிறது.
இந்த ஆராய்ச்சிகள், நாட்டின் முன்னேற்றத்துக்கும், மாணவர் கள் முனைவர் பட்டம் பெறுவதற் கும், அவர்களுடைய ஆராய்ச்சி திறமையை வெளிப்படுத்துவதற் கும் வாய்ப்பாக அமைகின்றன. இதற்காக பல்கலைக்கழக மானியக் குழு, ஆண்டுதோறும் ஆயிரம் ஆராய்ச்சித் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து நிதி ஒதுக்கீடு செய்யும். குறைந்தபட்சம் ஒரு ஆராய்ச்சி திட்டத்துக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை நிதி ஒதுக்கி வந்தது.
இந்நிலையில், 2014-ம் ஆண்டு முதல் ஆராய்ச்சி திட்டங்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அதற்கான நிதி ஒதுக்கீடு செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. பலருக்கு ஆராய்ச்சிக்கான நிதியை அனுப்புவதில்லை. அதனால், இந்த திட்டங்களை உருவாக்கிய ஆய்வு மாணவர்கள் ஆராய்ச்சி படிப்பைத் தொடர முடியாமல் பாதி யில் நிறுத்தும் நிலை தொடர்கிறது.
இதுகுறித்து பல்கலைக்கழக பேராசிரியர்கள் சிலர் கூறியதாவது:
கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியை கடந்த அரசுடன் ஒப்பிடும் போது இந்த அரசு கணிசமாகக் குறைந்துள்ளது. அதனால், 3 ஆண்டுகளுக்கு முன் ஆராய்ச் சிக்கு தேர்வான திட்டங்களுக்குக் கூட தற்போது வரை நிதி வழங் கப்படவில்லை. 2015-ம் ஆண்டுக் குப் பிறகு புதிய ஆராய்ச்சித் திட்டங்களைப் பல்கலைக்கழக மானியக் குழு தேர்வு செய்ய வில்லை. ஆராய்ச்சிகளை மட்டுமே செய்யக்கூடிய நிறுவனங்களில், நிதி ஒதுக்கீடு பற்றாக்குறையால் தொடர்ச்சியான ஆராய்ச்சிகள் நடக்கவில்லை. இந்திய வன அமைச்சகத்தில் ஆராய்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கும் பிரிவுகளுக்கு செயல்திட்டங்களை அனுப்பினாலும், அவற்றை அவர்கள் அங்கீகரிப்பதில்லை. ஆராய்ச்சிகளுக்கு தேர்வு செய்தா லும் அதற்கான நிதியை உரிய நேரத்தில் ஒதுக்கி அனுப்பு வதில்லை.
தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மாநில மன்றம், தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர் களின் ஆராய்ச்சித் திறனை ஊக்குவிக்க உருவாக்கப்பட்டது. இந்த மன்றமும் தற்போது செயலற்ற நிலையில் உள்ளது. ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காததால் இந்தியா மற்ற நாடுகளைவிட ஆராய்ச்சித் துறை யில் பின்தங்கி உள்ளது. இந்தியாவின் ஒரு சிறந்த கல்வி நிறுவனம்கூட உலக அளவிலான 100 சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் இடம்பெறவில்லை. இந்தியாவின் ஆராய்ச்சிக் கட்டுரை கள் தரமில்லாமல் இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் ஒருவரிடம் கேட்ட போது, “ஆய்வு மாணவர்களின் திட்டங்கள் ஆராய்ச்சிக்கு தேர்வு செய்யப்பட்டாலும், அவற்றுக்கான ஆவணங்களைச் சரியாக அனுப்ப வேண்டும். அதில், ஏதாவது சிக்கல் இருக்கும்பட்சத்தில் நிதி ஒதுக்கீடு தாமதமாக வாய்ப்பு உள்ளது. நிதி ஒதுக்கீடுகளே வரவில்லை என கூற முடியாது” என்றார்.
மங்கும் ஆராய்ச்சி திறமை
பேராசிரியர்கள் மேலும் கூறும்போது, “ஆராய்ச்சிகளுக்கு தொடர்ந்து நிதி ஒதுக்கீடு இல்லாத நிலையில் இந்தியாவில் அறிவி யல் தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள் பாதிக்கப்படும். மாணவர்களின் ஆராய்ச்சித் திறமை மழுங்கடிக்கப்படும். ஆராய்ச்சிகளில் ஈடுபடுவோர் எண்ணிக்கையும் குறையும். ஒரு நாட்டின் கட்டமைப்புக்கு ஆரம்பகால ஆராய்ச்சி முக்கியமானது. நிதியின்றி ஆராய்ச்சிகள் முடங்கினால் புதிய, புதிய கண்டுபிடிப்புகள் மூலம் கிடைக்கக்கூடிய வருமானம் குறைந்து பொருளாதாரம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் எதிர்காலம் எல்லாவற்றுக்கும் பிற நாடுகளையே சார்ந்திருக்கும் நிலை உருவாகும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT