Published : 06 Feb 2017 10:07 AM
Last Updated : 06 Feb 2017 10:07 AM
ஓசூரில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் ரோஜா மலர்களின் எண்ணிக்கை, கடந்த 3 ஆண்டுகளாக குறைந்து வருவதாக மலர் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். நிகழாண்டில் காதலர் தினத்தையொட்டி 30 லட்சம் ரோஜா மலர்கள் ஏற்றுமதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தேன்கனிக்கோட்டை பகுதியில் நிலவும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை காரணமாக விவசாயிகள் பசுமைக் குடில் அமைத்து 1,300 ஏக்கரில் மலர் சாகுபடி செய்து வருகின்றனர். இதில் 800 ஏக்கரில் தரமான ரோஜாக்களை விவசாயிகள் சாகுபடி செய்து, பெங்களூரு மலர் வர்த்தக மையம் மூலம் ஐக்கிய அரபு நாடுகளுக்கும், சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடு களுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர்.
காதலர் தினத்தையொட்டி வெளிநாடுகளில் ரோஜா மலர் களுக்கான தேவை அதிகரிக்கும். காதலர் தின வர்த்தகத்தை முன்னிட்டு ஏற்றுமதி செய்வதற்காக ஓசூரில் ரோஜா மலர்கள் அதிக அளவில் சாகுபடி செய்துள்ளனர்.
வறட்சி, மழையின்மை
கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால், ஓசூரில் இருந்து ஏற்றுமதியாகும் ரோஜா மலர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. 2015-ம் ஆண்டு உற்பத்தி பாதிப்பு, சீன மலர்கள் வருகையாலும், 2016-ம் ஆண்டு ஞாயிற்றுக்கிழமை யில் வந்த காதலர் தினத்துடன் சீனப் புத்தாண்டு வந்ததாலும் ஏற்றுமதி பாதிப்படைந்தது. நிகழாண்டில் போதிய மழையின்மை, வறட்சி, பண மதிப்பு நீக்கம் உள்ளிட்ட காரணங்களால் ரோஜா சாகுபடி யின் பரப்பளவும், ஏற்றுமதியும் குறைந்துள்ளதாக மலர் விவசாயி கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஏற்றுமதிக்கு தயார் செய்யப்படும் ரோஜா மலர்கள்.
இதுகுறித்து ஓசூரைச் சேர்ந்த மலர் விவசாயி பாலசிவபிரசாத், கூறும்போது, ‘‘தண்ணீர் பற்றாக் குறையால் ரோஜா மலர் சாகுபடி பரப்பளவு குறைந்துள்ளது. நிக ழாண்டு ரோஜா மலர்கள் உற் பத்தி 75 முதல் 85 லட்சம் வரை இருக்கும். இதில் 25 முதல் 35 லட்சம் வரை மலர்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது. அதிகபட்சமாக காதலர் தினத்தையொட்டி 30 லட்சம் ரோஜா மலர்கள் வெளிநாடுகளுக்குச் செல்கின்றன. 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கோடி மலர்கள் வரை ஏற்றுமதி செய்யப்பட்டன. சீனா, ஆப்பிரிக்கா நாடுகளில் உற்பத்தி அதிகரித்துள்ளதால் ரோஜா மலர் களின் விலையைக் குறைத்து வழங்குகின்றனர். அவற்றுடன், ஓசூர் மலர்கள் போட்டி போட முடியவில்லை. ரோஜா மலர் ஒன்றுக்கு இங்கு செய்யப்படும் செலவுத் தொகையில், 50 சதவீதம் குறைவாக, சீனா, ஆப்பிரிக்க விவசாயிகளுக்கு செலவாகிறது. இதனால், சர்வதேசச் சந்தையில் அந்நாட்டு மலர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர்.
உலக சந்தையில் நம் மலர்களை மூன்றாம் தர மலர்களாகத்தான் பார்க்கின்றனர். இங்கு மலர் விவ சாயிகளுக்கு தேவையான குளிர் பதனக் கிடங்கு, பேக்கிங் ஹவுஸ், உள்கட்டமைப்பு வசதிகளையும், அரசு ஏற்படுத்தித் தர வேண்டும். இதன்மூலம் உற்பத்தி செலவு குறைந்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி அதிகரித்து, சீனா, ஆப் பிரிக்கா மலர்களுடன் போட்டி போட முடியும். இவ்வாறு பால சிவபிரசாத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT