Published : 12 Aug 2016 01:07 PM
Last Updated : 12 Aug 2016 01:07 PM
வன விலங்குகள் ஊருக்குள் நடமாட்டம் குறித்து பொதுமக்களின் அலைபேசி எண்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் தெரிவிக்கும் வகையில் புதிய திட்டத்தை செயல்படுத்த இடுக்கி மாவட்ட நிர்வாகம் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் பல்வேறு வன விலங்குகள் வசிக்கின்றன. இவை தீவனம் மற்றும் தண்ணீரை தேடி அவ்வப்போது மலை அடிவார குடியிருப்புப் பகுதிகளில் நுழைந்து வீட்டில் வளர்க்கும் கால்நடைகளை தாக்குகின்றன. சில நேரங்களில் மனிதர்களையும் தாக்கி கொன்றுவிடுகிறன. கடந்த ஆண்டில் மட்டும் இம்மாவட்டத்தில் காட்டு யானைகள் தாக்கி சுற்றுலாப் பயணிகள் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். புலி, சிறுத்தை, காட்டெருமை போன்றவை தாக்கி 150-க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளன. இதனால் வன விலங்குகள் ஊருக்குள் புகுவதை தடுக்கவும், அதன் நடமாட்டத்தை கண்டறியவும் இடுக்கி மாவட்ட நிர்வாகம் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து இடுக்கி மாவட்ட அதிகாரி ஒருவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
“வனப் பகுதியில் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளை வன விலங்குகள் தாக்கிக் கொன்றுவிடுகின்றன. பொதுமக்களையும் தாக்குவதால் ‘அலர்ட் மெசேஜ்’ என்ற புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் இடுக்கி மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்களின் அனைத்து அலைபேசி எண்களும் சேகரித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட உள்ள கட்டுப்பாட்டு அறையில் வைக்கப்படும்.
பின்னர் ஊராட்சி, பேரூராட்சி என வார்டு வாரியாக உள்ளூர் மக்கள், வனத்துறையினர், தன்னா ர்வலர்கள் ஆகியோரைக்கொண்ட 100-க்கும் மேற்பட்ட தனித்தனி குழுக்கள் அமைத்து காவல் கட்டுப்பாட்டு அறையில் அவர்களின் பெயர், அலைபேசி எண்கள் பதிவு செய்யப்படும். இந்த கட்டுப்பாட்டு அறையில் இலவச தொலைபேசி எண் வைத்து வன விலங்குகள் ஊருக்குள் நுழைவதை கண்டால் குழுவினரோ அல்லது சுற்றுலாப் பயணிகளோ யாராக இருந்தாலும் இலவச தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தால், உடனடியாக கட்டுப்பாட்டு அறையில் இருந்து ஏற்கெனவே சேகரித்து வைக்கப்பட்டுள்ள பொதுமக்களின் அலைபேசி எண்களுக்கும் எஸ்எம்எஸ் மூலம் தகவல் தெரிவிக்கப்படும். இதனால் பொதுமக்கள் தங்களையும், தங்களது கால்நடைகளையும் பாதுகாத்துக்கொள்ள முடியும்.
இதனையடுத்து வனத்து றையினர் சம்பவ இடத்துக்கு சென்று அந்த வன விலங்கை பிடித்து வனப் பகுதிக்குள் விடுவார்கள். இந்த புதிய திட்டத்தை செயல்படுத்த அனுமதி வேண்டி கேரள அரசுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் விரைவில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT