Published : 30 Dec 2013 11:50 AM
Last Updated : 30 Dec 2013 11:50 AM
வரும் நாடாளுமன்றத் தேர்தலில், தேசியக் கட்சியான பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைக்கப்படும் என, கொங்குநாடு முன்னேற்றக் கழகம் (கொ.மு.க.) கட்சியின் தலைவர் பெஸ்ட் எஸ்.ராமசாமி தெரிவித்தார்.
2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு, தேசிய சமுதாயக் கூட்டமைப்பில் கொங்குநாடு முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்புக் கூட்டம் கோவையில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. இதில், கட்சியின் தலைவர் பெஸ்ட் எஸ்.ராமசாமி கோவை, திருப்பூர், ஈரோடு, பொள்ளாச்சி, தர்மபுரி மற்றும் ராமநாதபுரம் தொகுதி வேட்பாளர்களை அறிவித்தார்.
பின்னர் அவர் பேசியதாவது: வரும் நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகத்தில் 22 தொகுதிகளில் கொ.மு.க. போட்டியிடுகிறது. வாக்கு சேகரிப்பு மற்றும் தேர்தல் பணிகள் இருப்பதால், வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இது தேசிய அரசியலுக்கான தேர்தல். எனவே, தேசியக் கட்சிகளுடன் மட்டுமே, கொ.மு.க. கூட்டணி அமைக்கும். காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, பா.ஜ.க.வுடன் கூட்டணி அமையும்.
அறிவிக்கப்பட்ட தொகுதி வேட்பாளர்களில் எந்த மாற்றமும் இருக்காது. எங்கள் கோரிக்கைகள் மற்றும் கொள்கையின்படி, நல்ல கூட்டணி அமையும் பட்சத்தில், தொகுதியில் மாற்றம் இருக்குமே தவிர, வேட்பாளர்கள் மாறமாட்டார்கள்.
தனியாக ஒரு சமுதாயத்தின் வாக்குகளை வைத்து, எந்தக் கட்சியும் வெற்றி பெற முடியாது. அரசியல் ரீதியாக அனைத்து சமூகங் களையும் இணைக்கும் வகையில், கொ.மு.க. செயல்படும் என்றார் அவர்.
யார் யார்?
திருப்பூர்- கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையின் மாநிலத் தலைவர் பொங்கலூர் இரா.மணிகண்டன், ஈரோடு- கொ.மு.க.வின் மாநிலத் தலைமைக் கழகச் செயலாளர் காங்கேயம் எம். தங்கவேல், கோவை- கட்சியின் கொள்கைப்பரப்புச் செயலாளர் நேரு நகர் நந்து, பொள்ளாச்சி- கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையின் கவுரவத் தலைவர் ஆர்.கோவிந்தசாமி, தர்மபுரி- கொ.மு.க.வின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் பெ.சரவணன், ராமநாதபுரம்- அகில இந்திய தேவர் இளைஞர் பேரவையின் நிறுவனத் தலைவர் முகவை எஸ்.கணேசத்தேவர் ஆகியோர் போட்டி யிடுகின்றனர் என அறிவிக்கப்பட்டது.
வேட்பாளர்களைக் கட்சித் தலைவர் பெஸ்ட் எஸ்.ராமசாமி அறிமுகம் செய்து வைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT