Published : 11 Oct 2014 11:31 AM
Last Updated : 11 Oct 2014 11:31 AM
சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ளது சப்தமாலிகா அடுக்குமாடி குடியிருப்பு. கடந்த 1984-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த குடியிருப்பில் சுமார் 53 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இந்த குடியிருப்பில் உள்ள வீடுகளுக்கு சென்னை குடிநீர் வாரியம் குடிநீர் இணைப்பு வழங்கியுள்ளது. இந்த குடியிருப்பில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக தண்ணீர் சரியாக வருவதில்லை. இது தொடர்பாக அங்கு குடியிருக் கும் சிலர் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டனர்.
அப்போது, “எல்லோரும் வரி கட்டினால்தான் இணைப்பை வழங்குவோம் இல்லையென் றால் குடிநீர் வழங்க முடியாது” என்று அதிகாரிகள் கூறியதாக சொல்லப்படுகிறது. இதுபற்றி அந்தக் குடியிருப்பில் வசிக்கும் சாந்தகுமாரி என்பவர் கூறியதாவது: நான் பல ஆண்டுகளாக இந்த குடியிருப்பில் வசித்து வருகிறேன். கடந்த மார்ச் முதல் எங்கள் குடியிருப்பில் சரியாக தண்ணீர் வரவில்லை.
இதுபற்றி அதிகாரிகளைக் கேட்ட போது, “உங்கள் குடியிருப்பில் நிறைய பேர் தண்ணீர் வரி செலுத்தாமல் உள்ளனர். அவர்கள் செலுத்த வேண்டிய தொகை ஆயிரக்கணக்கில் உள்ளது” என்றனர். இது தொடர்பாக எங்கள் குடியிருப்பில் வசிக்கும் அனைவரிடமும் பேசினேன். ஆனால் 3 பேர் மட்டும் தண்ணீர் வரி செலுத்த வில்லை. இதனால் ஒட்டுமொத்த குடியிருப்புக்கும் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.இதனால் நாங்கள் தவித்து வருகிறோம். ஒழுங்காக வரி கட்டுபவர்களை பாதிக்கும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது எந்த வகையில் நியாயம்? இவ்வாறு அவர் கூறினார்.
அந்த குடியிருப்பில் தண்ணீர் வரி செலுத்தாதவர்களில் ஒருவரான விஜயகுமாரிடம் இதுபற்றி கேட்டபோது, “எங்கள் அடுக்குமாடி குடியிருப்பு மூன்று பிளாக்குகளை கொண்டது. இதில் நாங்கள் வசிக்கும் வீடு கடைசி பிளாக்கில் உள்ளது. முதல் இரண்டு பிளாக்கில் உள்ளவர்கள் எல்லா தண்ணீ ரையும் பயன்படுத்தி விடுவதால் எங்களுக்கு தண்ணீர் வருவதேயில்லை. இந்த நிலை கடந்த மூன்றாண்டுகளாக தொடருகிறது. பயன்படுத்தாத தண்ணீருக்கு எப்படி வரி செலுத்து வது? எனினும் என்னால் மற்றவர்கள் பாதிக்கக்கூடாது என்பதால் வரி செலுத்த ஒப்புக் கொண்டுள்ளேன்” என்றார்.
இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, “ அந்த அடுக்குமாடி குடியிருப்பில் 53 வீடுகள் இருந்தாலும், அவை ஒரே இணைப்பின் கீழ்தான் வரும். எல்லா வீடுகளுக்கும் ஒரே இணைப்பு என்பதால் அவர்கள் கூட்டாக இணைந்து வரி செலுத்தியிருக்கலாம். மூன்று பேர் மட்டும் வரி செலுத்தாமல் உள்ளதால் அவர்களிடம் வருவாய் மீட்பு முறைப்படி வரியை வசூல் செய்யவுள்ளோம் “ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT