Published : 14 Sep 2013 03:22 AM
Last Updated : 14 Sep 2013 03:22 AM

தமிழகத்தில் 14 புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்: ஜெயலலிதா தொடங்கிவைத்தார்

தமிழ்நாட்டில் புதிய 14 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை முதல்வர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்சிங் மூலம் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தார்.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் 22 பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. நடப்பாண்டில் மேலும் 14 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்குவதற்கு முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டார்.

அதன்படி, புதுக்கோட்டை மாவட்டம் – கறம்பக்குடி, தஞ்சாவூர் மாவட்டம் – பேராவூரணி, திருப்பூர் மாவட்டம் – காங்கேயம், நாமக்கல் மாவட்டம் – குமாரபாளையம், தர்மபுரி மாவட்டம் – காரிமங்கலம் (மகளிர்), கிருஷ்ணகிரி மாவட்டம் – ஓசூர், காஞ்சீபுரம் மாவட்டம் –உத்திரமேரூர், தூத்துக்குடி மாவட்டம் – கோவில்பட்டி, ராமநாதபுரம் மாவட்டம் – கடலாடி, திருவாடணை, முதுகுளத்தூர் மற்றும் விருதுநகர் மாவட்டம் –சிவகாசி ஆகிய 12 இடங்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளையும், பெரம்பலூர் மாவட்டம் – வேப்பூரில் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி மற்றும் கடலூர் மாவட்டம் – திட்டக்குடியில் திருவள்ளுவர் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, என மொத்தம் 14 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார்.

இந்த 14 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கும் 210 ஆசிரியர் பணியிடங்களும், 238 ஆசிரியரல்லா பிற பணியிடங்களும் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. மேலும், பணியாளர் சம்பளம், அலுவலக செலவினம் ஆகியவற்றிற்கும் மற்றும் கணினிகள், அறைகலன்கள், புத்தகங்கள், கருவிகள் போன்றவை கொள்முதல் செய்வதற்கும் ரூ.17 கோடியே 9 லட்சத்து 94 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த கல்லூரிகளுக்கு ரூ.105 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டில் நிரந்தரக் கட்டிடங்கள் கட்டுவதற்கு நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதற்கட்டமாக பி.ஏ., (ஆங்கிலம்), பி.ஏ., (தமிழ்), பி.காம்., பி.எஸ்சி., (கணிதம்) மற்றும் பி.எஸ்சி., (கணினி அறிவியல்) ஆகிய ஐந்து பாடப் பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டு அதற்கான மாணவ, மாணவியர் சேர்க்கை நடைபெற்றுள்ளது’ என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x