Published : 22 Jun 2016 01:48 PM
Last Updated : 22 Jun 2016 01:48 PM
அரிதாகி வரும் சிறு தானியங்களில் ஒன்றான சாமையை மீட்டெடுக்கும் வகையில் விருதுநகர் மாவட்டத்தில் குதிரை வாலியைத் தொடர்ந்து விதைப் பண்ணைகள் அமைத்து சாமை சாகுபடி மேற்கொள்ளப்பட உள்ளது.
உணவில் அரிசி முக்கியப் பங்கு வகிப்பதால் சிறு தானியங்களின் பயன்பாடு வெகுவாகக் குறைந்துள்ளது. மக்களிடம் வரவேற்பு குறைந்ததால் சத்துமிக்க சிறு தானியங்களின் உற்பத்தியும் நாளடைவில் குறையத் தொடங்கியது. சிறு தானியங்களில் உள்ள சத்துக்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் என்பதால் சிறு தானிய வகையைச் சேர்ந்த குதிரை வாலி, வரகு, சாமை ஆகியவற்றுக்கு தற்போது வரவேற்பு கிடைத்துள்ளது
சிறு தானியங்கள் பயிரிடப்படுவதால் உழவினால் மண் அரிமானம் தடுக்கப்படுவதுடன் மழை நீரும் சேகரிக்கப்படுகிறது. இதனால் களை மற்றும் பூச்சி தாக்குதலும் குறைகிறது. சாமை சாகுபடியில் செலவும் குறைவு.
சாமை அரிசியை சமைத்து உணவாகவும் உண்ணலாம் அல்லது அரைத்து மாவாக்கி ரொட்டி தயாரிக்கலாம். மேலும் இட்லி, தோசை, இடியாப்பம், லட்டு, பாயாசம், பனியாரம், உப்புமா, பிரியாணி, அப்பம் என வகைவகையான பதார்த்தங்களையும் செய்லாம். 100 கிராம் சாமையில் 207 கலோரிகளும், 1.5 கிராம் தாது சத்துக்களும், 169 கிராம் மாவுச் சத்தும், 7.7 கிராம் புரதச் சத்தும், 7.6 கிராம் நார்சத்தும், 9.3 கிராம் இரும்புச்சத்துக்களும் உள்ளன.
விருதுநகர் மாவட்டத்தில் குதிரைவாலியைத் தொடர்ந்து சத்துமிக்க சாமை சாகுபடியை அதிகரிக்க கோவையில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் இருந்து விதை பெறப்பட்டு விதைப்பண்ணைகள் அமைக்கப்பட உள்ளன.
இது குறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநர் (பொறுப்பு) செல்வம் கூறியதாவது:
விருதுநகர் மாவட்டத்தில் 2015-2016-ம் ஆண்டுக்கு நீர்வள, நிலவளத் திட்டத்தின் கீழ் சிறுதானியங்கள் உற்பத்தியை பெருக்கும் நோக்கத்துடன் சாமை விதைகள் கோவையில் உள்ள விவசாய பல்கலைக்கழகத்தில் இருந்து பெறப்பட்டு விருதுநகர் மாவட்டத்தில் விதைப் பண்ணைகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. விதைப்பண்ணை அமைக்கும் விவசாயிகளுக்கு விதை, உரம், வேளாண் கருவிகள் ஆகியவை மானியத்தில் வழங்கப்படும்.
இதன் மூலம் தரமான விதை உற்பத்தி செய்து மாநிலம் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டு அடுத்தடுத்த ஆண்டுகளில் சாகுபடி பரப்பளவை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT