Published : 27 May 2017 10:34 AM
Last Updated : 27 May 2017 10:34 AM
கும்பகோணம் அரசு மருத்துவமனையில் பல ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி பயன்பாடில்லாமல் காட்சிப் பொருளாகவே உள்ளது. இதேபோல, மற்றொரு பகுதியில் தண்ணீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படும் அவலநிலை உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கும்பகோணம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு தஞ்சாவூர், அரியலூர், திருவாரூர், கடலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இங்கு, பொதுமருத்துவம், அறுவை சிகிச்சை, குழந்தைகள் நலம், பெண்கள் நலம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு மகாமகத் திருவிழாவின்போது, இம்மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு வடக்குப் பகுதியில் பல ஆயிரம் ரூபாய் செலவில் 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட எவர்சில்வர் குடிநீர் தொட்டியும், குடிநீர் சுத்திகரிப்பு கருவிகளும் அமைக்கப்பட்டன. இந்த குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு ஒரு சில மாதங்கள் மட்டுமே செயல்பட்டது. அதன்பின், காட்சிப் பொருளாக இன்றளவும் காணப்படுகிறது.
இதேபோல, அவசர சிகிச்சை பிரிவின் தெற்கு பகுதியில் மற்றொரு குடிநீர் தொட்டி பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதிலிருந்து வெளியேறும் தண்ணீர் அந்தப் பகுதியில் அப்படியே தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் சின்னை.பாண்டியன் கூறும் போது, “கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சுகாதாரப் பணிகள், தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஆனால் அவர்கள் மருத்துவமனை வளாகத்தை சுத்தம் செய்வதில் அக்கறை காட்டுவதில்லை. அரசு பல லட்சம் ரூபாய் செலவிட்டும், மருத்துவமனையின் முகப்பு பகுதியிலேயே இப்படி வாரக்கணக்கில் தண்ணீர் தேங்கியுள்ளது. உடனடியாக மாவட்ட நிர்வாகமும், மருத்துவத்துறை இயக்குநரகமும் இதற்கு தீர்வு காண வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT