Last Updated : 06 Dec, 2013 12:00 AM

 

Published : 06 Dec 2013 12:00 AM
Last Updated : 06 Dec 2013 12:00 AM

ஓய்வில்லாத ஓட்டம் ரயிலுக்கு மட்டுமல்ல.. ஓட்டுநர்களுக்குமே: 17,000 காலிப் பணியிடங்கள் நிரப்பாததால் தொடரும் வேதனை

‘என்னோட பிறந்தநாள், அப்பாவின் கல்யாண நாள்னு, எல்லா விசேஷங்களுக்கும் அப்பா ‘ஆப்சென்ட்’ ஆகிவிடுகிறார். எங்கள் அப்பா வீட்டுக்கு திரும்ப வரவேண்டும்’ என்ற பொருள் பதிந்த தட்டிகளை ஏந்தியவாறு, குழந்தைகளும், பெண்களும், 2-ம் தேதியன்று ஈரோட்டில் பெருந்திரளாக ஊர்வலம் நடத்தினர். இந்த கோஷம் எழுப்பிய குழந்தைகளின் அப்பாக்கள், லட்சக்கணக்கான பயணிகளை பத்திரமாக கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டுவரும் ரயில் ஓட்டுநர்கள் (லோகோ பைலட்).

முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில், இரவில் சுகமாய் தூங்கி, காலையில் எழுந்து தாங்கள் செல்ல வேண்டிய ஊருக்கு சென்றடையும் லட்சக்கணக்கான ரயில் பயணிகளை பத்திரமாக அழைத்துச் செல்லும், ரயில் ஓட்டுநர்களின் வாழ்க்கையின் மறுபக்கம், வருத்தமானதாகவே இருக்கிறது.

இந்தியன் ரயில்வேயில், 17 ஆயிரம் காலிப்பணியிடங்கள் இருப்பதாக மத்திய அரசே ஒப்புக்கொண்டுள்ள நிலையில், இந்த பணியாளர் பற்றாக்குறை காரணமாக, ரயில் ஓட்டுநர்களின் பணிச்சுமையும் கூடி வருகிறது. தொடர்ச்சியான பயணத்தில், ஒரு நிமிடம் கண் அயர்ந்து, சிக்னலை மீறினாலும், விவரிக்க முடியாத விபரீதங்களை ஏற்படுத்தும் சவாலான பணியைத்தான், ரயில் ஓட்டுநர்கள் தினமும் மேற்கொண்டு வருகின்றனர்.

‘கடந்த 1990-ம் ஆண்டு, ஈரோடு ரயில்வே பிரிவில், 1250 பணியாளர்கள் பணியாற்றினர். தற்போது, இது 635 ஆக குறைந்துள்ளது. பணியாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு குறைந்துள்ளது என்பதற்கு இது ஒரு உதாரணம்’ என்று கூறும் ரயில்வே ஊழியர்கள், ‘தொழில்நுட்ப வளர்ச்சி, நவீன வடிவமைப்புகளால், ஊழியர்களின் தேவை குறைந்துவிட்டது என்று நிர்வாக தரப்பில் கூறினாலும், தேவைக்கு குறைவான ஊழியர்களே பணியில் உள்ளனர் என்பதை அவர்களால் மறுக்க முடியாது’ என்கின்றனர். கோவை, குன்னூர், சேலம், ஈரோடு ஆகிய நான்கு பிரிவுகளைக் கொண்ட சேலம் ரயில்வே கோட்டத்தில் மட்டும், 78 ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப வேண்டியுள்ளது என்பது அவர்கள் தரும் கணக்கு.

நோயாளியாகும் ஓட்டுநர்கள்

ரயில்வே ஓட்டுநர்களின் பிரச்சினைகள் குறித்து தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியதாவது:

சரியான தூக்கமின்மை, உணவுப் பழக்கம், தொடர் பணியால் ஏற்படும் மன உளைச்சல் போன்றவையால், சர்க்கரை, ரத்தக்கொதிப்பு போன்ற நோய்கள் எளிதில் ஓட்டுநர்களுக்கு வந்து விடுகிறது. ரயில்வேயில் 60 வயது வரை பணியாற்ற முடியும் என்றாலும், பணியின் கடுமை காரணமாக, பலர் 50 வயதிலேயே விருப்ப ஓய்வு பெற்றுச் சென்று விடுகின்றனர்.

கடுமையான விதிமுறைகள்

உதாரணமாக, ஈரோட்டில் இருந்து சென்னை செல்லும் விரைவு ரயில், 400 கி.மீ., தூரத்தைக் கடக்க, ஏழு மணி நேரமாகிறது. இந்த ஏழு மணி நேரமும், எஞ்சின் பகுதியில் ஒரு ஓட்டுநரும், அவருக்கு உதவியாக ஒரு உதவியாளரும் பணியில் இருப்பர். இவர்கள் ஒரு நிமிடம்கூட கண் அயர்ந்து விட முடியாது.

விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்க, ஒரு நிமிடத்துக்கு ஒருமுறை, கண்காணிப்பு பணிக்காக எஞ்சினில் வைக்கப்பட்டுள்ள பொத்தானை (விஜிலென்ஸ் கண்ட்ரோல் டிவைஸ்) அழுத்தாவிட்டால், ரயில் நின்றுவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பயணத்தில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டிய கட்டாயம் ஓட்டுநர்களுக்கு உள்ளது. இதற்கிடையேதான், அவசர உணவு, தூக்கத்தை தவிர்க்க டீ போன்றவை நடக்கும் என்கின்றனர் அவர்கள்.

குடும்பத்தினர் சோகம்

ரயில் ஓட்டுநர்களின் பணி சரிவர வரன்முறைப்படுத்தாததாலும், காலிப்பணியிடங்களால், தொடர் பணி காரணமாகவும் தங்கள் குடும்பத்துடன், குழந்தைகளுடன் ஒரு நாள்கூட முழுமையாக கழிக்க முடிவதில்லை என வருந்துகின்றனர் ஓட்டுநர்கள். குழந்தைகளின் பிறந்தநாள், திருமண நாள், உறவினர் வீட்டு விசேஷங்கள் என எதிலும் பங்கேற்க முடியாதவாறு பணி வரன்முறைப்படுத்தப்பட்டுள்ளதாக இவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

ரயில் ஓட்டுநர்களுக்கு தொடர்ந்து இரவுப்பணி கொடுக்கக்கூடாது என்ற பரிந்துரைகளும் மீறப்படுவதால், அதிகாலை வேளைகளில் கண் அயர்ந்து விடும் அபாயம் நீடித்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

பயணிகளின் பாதுகாப்பு

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 2-ம் தேதியன்று ரயில்வே ஓட்டுநர்களின் குடும்பத்தார் ஈரோட்டில் நடத்திய ஊர்வலத்தில் பங்கேற்க வந்திருந்த தெற்கு ரயில்வே ஓட்டுநர் சங்கத் தலைவர் வி.ஆர்.பிரகாஷ் கூறுகையில், “காலிப்பணியிடங்களை நிரப்பினால் மட்டுமே, ஓட்டுநர்களின் பணிப்பளுவைக் குறைக்க முடியும். மிகவும் சவாலான பணியை மேற்கொள்ளும் ரயில் ஓட்டுநர்களுக்கு போதிய ஓய்வை கொடுத்தால் மட்டுமே, பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய முடியும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x