Published : 12 Dec 2013 09:20 AM
Last Updated : 12 Dec 2013 09:20 AM
தமிழக மீனவர்களை பாதுகாப்பது மத்திய, மாநில அரசுகளின் கடமை என்று மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
இந்திய கடலோர காவல் படைக்கு அதிநவீன வசதிகளுடன் கூடிய ஐசிஜிஎஸ் ராஜ்துவாஜ் என்ற புதிய ரோந்து கப்பல் வாங்கப்பட்டுள்ளது.
இந்த கப்பலை கடலோர காவல் படைக்கு ஒப்படைக்கும் விழா சென்னைத் துறைமுகத்தில் புதன்கிழமை நடந்தது.
இந்திய கடலோர காவல் படை டைரக்டர் ஜெனரல் அனுராக் ஜி.தப்லியல் விழாவிற்கு தலைமை தாங்கினார். கடலோர காவல் படையின் ஐஜி எஸ்.பி.சர்மா முன்னிலை வகித்தார். மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜி.கே.வாசன், புதிய கப்பலை இந்திய கடலோர காவல் படைக்கு வழங்கினார்.
இந்த விழாவில், ஜி.கே.வாசன் பேசியதாவது:
இந்திய கடலோர காவல் படை கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுறுவலை கண்காணிப்பது, கடல் கொள்ளையர்களை கண்காணிப்பது, இயற்கைப் பேரிடர் நிகழும் போது மீட்பு பணியில் ஈடுபடுவது மற்றும் உதவிகளை செய்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் சேவை செய்து வருகிறது. உலக அளவில் இந்தியக் கடலோரக் காவல் படை சிறந்து விளங்குகிறது. நமது நாட்டின் கடலோரப் பாதுகாப்பு பணியில் இந்தியக் கடலோர காவல் படை மற்றும் இந்தியக் கடற்படை இணைந்து சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.
அதன்பின், ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
இந்தியா, இலங்கை மீனவர்கள் எல்லைகளைத் தாண்டி மீன்பிடிப்பது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதற்கு பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு காணப்படும். கடந்த 3 ஆண்டுகளாக பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து, மியான்மர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த மீனவர்கள் தங்களது எல்லைகளைத் தாண்டி இந்தியக் கடலில் மீன்பிடித்து வருகின்றனர்.
நடப்பு ஆண்டில் மட்டும் எல்லையைத் தாண்டி மீன்பிடித்த வெளிநாட்டு மீனவர்கள் 359 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 61 மீன்பிடிக்கப்பல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் இலங்கை மீனவர்கள் 275 பேர் மற்றும் 51 கப்பல்கள் அடங்கும்.
இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்து காட்டு மிராண்டித்தனமாக நடத்துகின்றனர். ஆனால், இலங்கை மீனவர்களை கைது செய்யும் இந்திய அரசு மனிதாபிமானத்தோடு நடத்துகிறது.
மீனவர்களின் வாழ்வாதாரம் கடலை நம்பித்தான் உள்ளது. மீனவர்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் அரசுதான் தீர்த்து வைக்க வேண்டும். 2007ம் ஆண்டு முதல் இதுவரை சோமாலியா கடல் கொள்ளையர்களால் 343 இந்திய கடல் பயணிகள் கடத்தப்பட்டுள்ளனர்.
இவர்களில் 8 பேர் தவிர மற்ற அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர். இந்திய கடற்படையினர் 150 சோமாலியா கடல் கொள்ளையர்களை கைது செய்துள்ளனர்.
கலங்கரை விளக்கம் பார்வை நேரம் நீட்டிப்பு
மெரினா கலங்கரை விளக்கம் பொதுமக்களின் பார்வைக்காக நவம் பர் 14ம் தேதி திறக்கப்பட்டது. பொதுமக்கள், மாணவ, மாணவி கள் ஏராளமானோர் கலங்கரை விளக்கத்தை பார்வையிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று கலங்கரை விளக்கம் பார்வையிடும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 2014 ஜனவரி 21-ம் தேதி முதல் காலை 9.30 மணி வரை மாலை 5.30 மணி வரை கலங்கரை விளக்கத்தை பார்வையிடலாம்.
மதிய உணவு இடைவேளை ஒரு மணி நேரம். விடுமுறை நாட்களில் உணவு இடைவேளை இல்லை. முதல் கட்டமாக கிறிஸ்துமஸ், பொங்கல் மற்றும் கோடை விடுமுறையை முன்னிட்டு வரும் 20-ம் தேதி முதல் 2014 ஜனவரி 20-ம் தேதி வரையும் மற்றும் ஏப்ரல் 15 முதல் மே 31-ம் தேதி வரை காலை 5.30 மணி முதல் மாலை 6 மணி வரையும் கலங்கரை விளக்கத்தை பார்வையிடலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT