Published : 02 Oct 2013 07:15 PM
Last Updated : 02 Oct 2013 07:15 PM

அவசரச் சட்டத்தை திரும்பப் பெற்றது அமைச்சரவை

குற்ற வழக்கில் தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.க்களை பதவி பறிப்பு நடவடிக்கையிலிருந்து காப்பாற்றும் நோக்கில் கொண்டு வரப்பட்ட சர்ச்சைக்குரிய அவசரச் சட்டம் வாபஸ் பெறப்படுகிறது. அது தொடர்பான மசோதாவும் விலக்கிக் கொள்ளப் படுகிறது.

புதன்கிழமை கூடிய மத்திய அமைச்சரவை இந்த முடிவை எடுத்தது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் 20 நிமிடம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

அவசரச் சட்டத்துக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் இந்த திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

இது பற்றி நிருபர்களிடம் பேசிய செய்தி, ஒலிபரப்புத்துறை அமைச்சர் மணீஷ் திவாரி, குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்ட எம்.பி. எம்.எல்.ஏ தொடர்பான அவசரச் சட்டத்தையும், நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ள இது சம்பந்தமான மசோதாவையும் விலக்கிக் கொள்வதென அமைச்சரவை முடிவு செய்ததாகத் தெரிவித்தார்.

முன்னதாக, இந்த அவசரச் சட்டம் தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சித் தலைவர் அஜீத் சிங் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களைத் தொடர்புகொண்டு பிரதமர் பேசினார். சர்ச்சைக்குரிய அவசரச் சட்டத்தை வாபஸ் பெறுவதாக எடுத்துள்ள முடிவை அவர்களிடம் பிரதமர் தெரிவித்ததாக தெரிகிறது. அவசரச் சட்டம் வாபஸ் சரியானதே என்று அஜீத் சிங் கூறியுள்ளார். அட்டார்னி ஜெனரல் வாகன்வதியிடமும் பேசினார் பிரதமர். பெல்ஜியம், துருக்கிக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி புறப்படுவதற்கு முன் அவரையும் சந்தித்து இந்த அவசரச் சட்ட சர்ச்சை தொடர்பாக விளக்கம் கொடுத்தார்.

இந்த அவசரச் சட்டம் முட்டாள்தனமானது, கிழித்தெறிய வேண்டும் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து கருத்து தெரிவித்திருந்த நிலையில், அமெரிக்கப் பயணம் முடிந்து டெல்லி திரும்பிய மறுதினமே பிரணாபை சந்தித்தார் மன்மோகன்.

பிரதமரிடம் ராகுல் விளக்கம்...

முன்னதாக, அவசரச் சட்டத்தை எதிர்ப்பது ஏன் என்பது பற்றி பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து விவரித்தார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி. பிரதமரின் இல்லத்துக்கு சென்ற ராகுல் சுமார் 20 நிமிடங்கள் அவருடன் பேசினார் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

காங்கிரஸ் உயர்நிலைக் குழு ஆலோசனை...

ராகுலின் சந்திப்புக்குப் பிறகு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே, சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது பட்டேல் உள்ளிட்டோர் இடம்பெற்ற காங்கிரஸ் உயர்நிலைக் குழு டெல்லியில் கூடி அவசரச் சட்ட விவகாரம் குறித்து விவாதித்தது. மக்கள் மனநிலையை புரிந்து கொண்டு அதை வாபஸ் பெறுவதே நல்லதாக இருக்கும் என்ற கருத்து அக்கூட்டத்தில் பங்கேற்றவர்களிடம் நிலவியதாக தெரிகிறது. அந்த முடிவின்படி அரசின் நிலையை தெரிவிக்க குடியரசுத் தலைவரை பிரதமர் சந்தித்தார். அமெரிக்காவிலிருந்து டெல்லி திரும்பும்போது விமானத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த மன்மோகன் சிங், அவசரச் சட்டத்தை ராகுல் எதிர்ப்பது ஏன் என்பதை கேட்டறிவேன் என்று தெரிவித்திருந்தார்.

பிரச்சினையின் பின்னணி...

டெல்லியில் கடந்த வெள்ளிக்கிழமை காங்கிரஸ் பொதுச் செயலர் அஜய் மக்கான் ஏற்பாடு செய்திருந்த நிருபர்கள் சந்திப்பு கூட்டத்துக்கு முன்னறிவிப்பின்றி சென்ற ராகுல் காந்தி, இந்த அவசர சட்டம் முட்டாள்தனமானது, அதை கிழித்தெறிய வேண்டும் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்காவில் இருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது. அன்றைய தினமே, பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், பிரதமரின் அதிகாரத்தை பலவீனப்படுத்துவது தனது நோக்கமல்ல என்றும், சிக்கல் மிக்க தருணங்களிலும் அதை திறமையாக சமாளிக்கக் கூடிய தலைமைப் பண்பு மிக்கவர் பிரதமர். அவர் மீது எப்போதும் மதிப்பும் மரியாதையும் உண்டு என்று ராகுல் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் அவசரச் சட்டம் பற்றி ராகுல் காந்தி தெரிவித்த கருத்து பிரதமரை அவமரியாதை செய்வதாகும் என எதிர்க்கட்சிகள் தரப்பில் விமர்சனம் எழுந்தது. அமெரிக்கப் பயணத்தை முடித்து டெல்லி திரும்பியதும் பிரதமர் பதவியிலிருந்து அவர் விலகவேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால் ராஜிநாமா செய்யமாட்டேன் என்பதை திட்ட வட்டமாக அறிவித்தார் பிரதமர்.

அந்த மூன்று மாதம்...

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் ஒரு பிரிவு, குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 3 மாத அவகாசம் வழங்குகிறது. அதுவரை அவர்கள் பதவியில் நீடிக்க அது வகை செய்கிறது. அந்த பிரிவை உச்ச நீதிமன்றம் ஜூலை 10ம் தேதி ரத்து செய்து, தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் பதவியை உடனடியாக பறிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என தீர்ப்பளித்திருந்தது. அதை செல்லாததாக்கிட வகை செய்யும் அவசரச் சட்டத்துக்கு செப்டம்பர் 24ம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி முன்பு எடுத்த முடிவைத்தான் இப்போது அமைச்சரவை மாற்றிக் கொண்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புப்படி எம்.பி. பதவி இழக்க உள்ள முதலாவது நபர் காங்கிரஸ் எம்.பி. ரஷீத் மசூத். ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள இவர், உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். மாநிலங்களவை உறுப்பினராக உள்ள இவர் 1990ல் வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி அரசில் தனிப்பொறுப்புடன் கூடிய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் தகுதியில்லா மாணவர்களைச் சேர்த்தார் என்ற குற்றச்சாட்டின்கீழ் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுள்ளார்.

கால்நடை தீவன ஊழல் வழக்கில் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்ட பிகார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவருமான லாலு பிரசாத் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் எம்.பி. ஜெகதீஷ் சர்மா உள்ளிட்டோருக்கு இன்று தண்டனை அறிவிக்கப்பட உள்ளதால் அவர்களும் பதவி இழக்கும் நிலை உருவாகி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x