Published : 03 Dec 2013 08:36 AM
Last Updated : 03 Dec 2013 08:36 AM
தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி தீவிரமடைந்துள்ளதால், தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது.
தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியானது, திங்கள்கிழமை காலை மேலும் வலுப்பெற்று தீவிர காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக இலங்கை மற்றும் தமிழகத்தை ஒட்டிய வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த மற்றொரு தாழ்வு நிலை தற்போது உருவாகி உள்ள தாழ்வு பகுதியுடன் இணைந்து விட்டது.
இந்தத் தீவிரக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக மாறுவதற்கான வாய்ப்புள்ளது என்றும், அவ்வாறு மாறிய பின்பு அது எந்தத் திசையில் செல்கிறது என்பதைப் பொருத்து வரும் நாட்களில் தமிழகத்துக்கான மழை வாய்ப்பு பற்றி தெரிவிக்க முடி யும் என்றும் வானிலை ஆய்வு மையத்தினர் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில், ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரை முடிந்த 24 மணிநேரத்தில் பதிவான மழை:
திருவள்ளூர் மாவட்டம் எண்ணூர் -10செ.மீ., ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் -9 செ.மீ., திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் -6 செ.மீ., காரைக்கால், நீலகிரி மாவட்டம் குன்னூர் ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ., நீலகிரி மாவட்டம் குயவன் பாலம், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஆகிய பகுதிகளில் தலா 4 செ.மீ., காஞ்சி மாவட்டம் கேளம்பாக்கம், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், உள் மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் என்றும் சென்னையைப் பொருத்த வரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதியில் மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT