Published : 30 Oct 2013 03:49 PM
Last Updated : 30 Oct 2013 03:49 PM

நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் மத்தியில் ஆட்சி மாறும்: முதல்வர் ஜெயலலிதா

தமிழக சட்ட மன்றத்தில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசின் பொருளாதார கொள்கையை கடுமையாக விமர்சித்தார்.

பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்படட் நிதியில் 20 சதவீதம் குறைத்துள்ளதற்கும், மத்திய அரசு கொண்டுவரவுள்ள புதிய வரிக்கும் எதிர்ப்பு தெரிவித்தார்.

அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன், மத்தியிலே அரசு மாறும், ஆட்சி மாறும், எல்லாமே மாறும், அப்போது மாநில அரசுக்கு நெருக்கடி தரும் புதிய வரி தொடர்பான சட்டத்தையே தூக்கி எறிவோம் என்றும் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ச. இராமச்சந்திரன் விலைவாசி குறித்து பேசியதற்கு பதில் அளித்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா ஆற்றிய உரையில்:

விலைவாசி ஏற்றத்திற்கு காரணம் மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகள். ஆனால் விலைவாசி ஏற்றத்தை சமாளிக்க மாநில அரசு தன்னால் முடிந்த அளவு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அதே சமயத்தில், மத்திய அரசு பொறுப்புடன் நடந்து கொள்ளவில்லை. நிதிநிலையைப் பற்றி மத்திய அரசிடமிருந்து மாநில அரசுக்கு வரவேண்டிய நிதிகளைப் பற்றி எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இங்கே குறிப்பிட்டார். மத்திய அரசு குறிப்பிட்ட ஒரு திட்டத்தின் கீழ் இத்தனை கோடி ரூபாய் மாநில அரசுக்கு ஒதுக்கப்படும் என்று அவர்களுடைய மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவித்த பின்னர் மாநில அரசு அதற்கேற்ப தனது திட்டங்களை வகுத்து செயல்பட ஆரம்பிக்கிறது.

ஆனால், அண்மையில், துரதிர்ஷ்டவசமாக, இதுவரை வரலாற்றில் இல்லாததாக, ஒரு முன்மாதிரியாக மத்திய அரசு தன்னுடைய நம்பகத் தன்மையையே கெடுத்துக் கொண்டுள்ளது. அதாவது, ஏற்கெனவே, பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ஒவ்வொரு திட்டத்தின் கீழ் இத்தனை கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்று தெரிவித்த பிறகு அதில் நாங்கள் அதை நம்பி செலவு செய்ய ஆரம்பித்த பிறகு, 20 சதவீதம் குறைத்து இருக்கிறார்கள்.

அப்படியானால், குறிப்பிட்டு மத்திய அரசிடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்கெனவே மாநில அரசு பல பணிகளை துவங்கிவிட்டதே, பல கோடி ரூபாய்களை செலவு செய்து விட்டதே, அவையெல்லாம் எங்கிருந்து வரும், அந்தப் பணத்தை யார் மீண்டும் ஈடு செய்வார்கள்.

ஆகவே, இப்படி பல பிரச்சனைகளுடன் போராடிக் கொண்டு அதே நேரத்தில் மத்திய அரசு எடுக்கின்ற தவறான நடவடிக்கைகள் காரணமாக, மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக, சாமான்ய மக்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள், துன்பப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து இந்த தமிழக அரசு, தன்னால் இயன்ற அளவு மக்களின் துன்பங்களை குறைத்து, விலைவாசியை குறைக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இப்போது மாநில அரசுக்கு என்று இருக்கின்ற ஒரே வருவாய் Commercial Taxes மூலமாக வருகின்ற வருவாய்தான். வேறு எந்த வருமானமும் கிடையாது. அதிலேயும் கை வைக்க வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது. அதற்காகத்தான், இந்த Goodwill Services Tax Bill-ஐ அவர்கள் கொண்டு வருகிறார்கள். அதற்காகத்தான் அதை கடுமையாக எதிர்த்திருக்கிறோம்.

சாதாரண எதிர்ப்பல்ல, ஒரு முறையல்ல, இரு முறையல்ல, 2011 முதல் இந்த GST Bill-ஐப்பற்றி அவர்கள் குறிப்பிடும் போதெல்லாம், கொண்டு வரவேண்டும் என்று சொல்லும் போதெல்லாம், இந்த அரசு தொடர்ந்து எதிர்த்துக் கொண்டே வந்திருக்கிறது. அண்மையிலும், மாநில நிதி அமைச்சர்களின் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அதில் நம்முடைய மாநிலத்தின் சார்பில் Commercial Taxes அமைச்சர் அங்கே கலந்து கொண்டார். ஒட்டுமொத்தமாக அந்த சட்டத்தையே எதிர்த்து இருக்கிறோம்.

அதையும் மீறி, அவர்கள் இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்தால், பாதிப்பு அதிக நாட்கள் வரை இருக்காது. அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன், மத்தியிலே அரசு மாறும், ஆட்சி மாறும், எல்லாமே மாறும், அப்போது இந்தச் சட்டத்தையே தூக்கி எறிவோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x