Published : 15 Nov 2013 12:00 AM
Last Updated : 15 Nov 2013 12:00 AM
தேசிய அளவிலான புலிகள் கணக்கெடுப்புப் பணிக்காக, டிசம்பர் மாதம் 10 நாட்கள் புலிகள் காப்பகங்கள் மூடப்படுகின்றன.
இந்தியாவின் தேசிய விலங்கான புலி, தற்போது அழிவின் விளிம்பில் உள்ளது. இதனால், புலிகளைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்தியா முழுவதும் ஒருங்கிணைந்த புலிகள் கணக்கெடுப்புப் பணி, நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கிறது. கடந்த 2006-ம் ஆண்டு மற்றும் 2010-ம் ஆண்டுக்குப் பிறகு, தற்போது டிசம்பர் 16-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை, தேசிய அளவில் புலிகள் கணக்கெடுப்புப் பணி நடக்கிறது.
ஒரே நாளில் கணக்கெடுப்பு
தென்னிந்தியாவில் தமிழகம், கேரளம் மற்றும் கர்நாடகத்தில், இந்த கணக்கெடுப்புப் பணி ஒருங்கிணைந்து ஒரே நாளில் நடக்கிறது. இதற்கான ஆலோசனைக் கூட்டம், கர்நாடக மாநிலம் பந்திப்பூரில், தேசிய புலிகள் ஆணைய இயக்குநர் ராஜேஷ் கோபால் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில், கணக்கெடுப்புப் பணியை முன்னிட்டு, மூன்று மாநிலங்களிலும் உள்ள அனைத்து புலிகள் காப்பகங்களையும் 10 நாட்கள் மூடவும் களப் பணியாளர்களுக்குப் பயிற்சி அளிக்கவும் முடிவு செய்யப்பட்டது.
யானை கணக்கெடுப்பும் உண்டு
புலிகள் கணக்கெடுப்புப் பணியின் ஒருங்கிணைப்பாளர், தமிழக வனத்துறை கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மல்கானி கூறியதாவது: தென்னிந்தியாவில் தமிழகம், கேரளம் மற்றும் கர்நாடக புலிகள் காப்பகங்கள் இணைந்து தொடர்ச்சியாக உள்ளதால், இம்மூன்று மாநிலங்களிலும் ஒருங்கிணைந்த கணக்கெடுப்புப் பணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சுற்றுலா மற்றும் போக்குவரத்து இருந்தால் விலங்குகள் இடம் பெயர்ந்துவிடும். இதனால், கணக்கெடுப்புப் பணிக்கு இடையூறாக இருக்கும் என்பதால், சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்படுகிறது. கணக்கெடுப்புப் பணி நான்கு கட்டமாக நடக்கும். களப்பணி தகவல் சேகரிப்பு, புலிகளின் கால்தடம், எச்சம், நீர்நிலைகளில் நேரடியாகக் கணக்கெடுக்கும் முறை மேற்கொள்ளப்படும். நவீன கேமிராக்களைப் பொருத்தி அறிவியல் ரீதியாகவும் கணக்கெடுக்கப்படும் என்றார்.
புலிகள் கணக்கெடுப்புப் பணியின்போதே, பிற விலங்குகளான யானை, காட்டெருமை, மான்களின் கணக்கெடுப்பும் நடக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT