

மத்திய அமைச்சர்கள் ஜி.கே.வாசன், ப.சிதம்பரத்தைத் தொடர்ந்து, காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கக் கூடாது என்று ஜெயந்தி நடராஜன் வலியுறுத்தியுள்ளார்.
இதனால், இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாடு தொடர்பாக முடிவெடுப்பதில், பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடும் நெருக்குதல் ஏற்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன், "காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்வது பற்றி நல்ல முடிவு எடுப்பார். அவர் கலந்துகொள்ளக் கூடாது என்று தொடர்ந்து நான் வலியுறுத்தி வருகிறேன். அதைக் கடிதம் மூலமாகவும் தெரிவித்துள்ளேன். தமிழ் மக்களின் உணர்வுகளை அறிந்து பிரதமர் நல்ல முடிவு எடுப்பார்.
அத்துடன், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடாது என்று பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து வலியுறுத்தவுள்ளேன்" என்றார்.
இசைப்பிரியா படுகொலை குறித்து கேட்டதற்கு, "இசைப்பிரியா தொடர்பான ஆவணப் படத்தை ஊடகங்கள் மூலமும் பத்திரிகை மூலமும் அறிந்துகொண்டேன். அந்தக் காட்சிகளைப் பார்க்கவே முடியாது. அந்த அளவுக்கு பயங்கரமாக உள்ளது. அதை வன்மையாக கண்டிக்கிறேன்" என்றார் ஜெயந்தி நடராஜன்.
இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என்ற வலியுறுத்தல்கள், தமிழகத்தில் மேலும் வலுவடையத் தொடங்கியுள்ளது.
பிரதமர் பங்கேற்கக் கூடாது என்று மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நேரில் வலியுறுத்தினார். இதேபோல், தமிழ் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு முடிவெடுக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறிவருவதும் கவனத்துக்குரியது.