Published : 06 Jan 2014 12:00 AM
Last Updated : 06 Jan 2014 12:00 AM
“பா.ம.க.வுக்குப் போடப்படும் ஓட்டு மதுவுக்கு எதிரான ஓட்டு” என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
விழுப்புரத்தில் பா.ம.க.வின் மகளிர் அரசியல் எழுச்சி மாநாடு ஞாயிற்றுக்கிழமை மாநில மகளிர் சங்கச் செயலாளர் சிலம்புசெல்வி தலைமையில் நடந்தது. இம்மாநாட்டில் ராமதாஸ் பேசியதாவது:
ஒரு பெண் ஆளும் இந்த ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை.ஒரு மூதாட்டி பகலில் நடந்துபோகக்கூடப் பாதுகாப்பு இல்லை. கடந்த ஆண்டு பெண்களுக்கு எதிராக 7ஆயிரம் குற்ற சம்பவங்கள் நடந்துள்ளன. 2012-ம் ஆண்டு 643 பாலியல் பலாத்காரம், கடந்த ஆண்டு 853 பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடந்துள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 37 பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடந்தன. 47 பெண்கள் மானபங்கம் செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் தாத்தான்குளத்தில் 12 வயது புனிதா என்ற பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.அந்த வழக்கில் இன்னும் விசாரணைகூட தொடங்கப்படவில்லை. இதற்கெல்லாம் காரணம் மதுதான். மதுரை அருகே மூன்று மாணவர்கள் பள்ளியில் உள்ள பெஞ்சை விற்று குடித்துள்ளனர். இந்த நாடு எங்கே செல்கிறது?
பெண்களுக்குக் கட்சிகளின் பெயர்கூட தெரியாது. ஆனால் சின்னம் மட்டும் தெரியும். ஏனெனில் இதுவரை ஆண்ட கட்சிகள் அந்த அளவுக்கு தான் பெண்களுக்குக் கல்வியைக் கொடுத்துள்ளன.பா.ம.க.வுக்குப் போடப்படும் வாக்கு மதுவுக்கு எதிரான வாக்கு. பெண்களை உயர்த்தி வைத்திருக்கும் இந்நாட்டில்தான் பெண்களுக்கு எதிராக இத்தனை குற்றங்கள். இளைஞர்களின் எழுச்சி மாநாடு மார்ச் மாதம் நடத்தப்படும்.மாற்றத்தை எங்களால் மட்டுமே கொடுக்க முடியும்.
இவ்வாறு ராமதாஸ் பேசினார்.
இம்மாநாட்டில் விழுப்புரம் வேட்பாளர் வடிவேல் ராவணன், மாநில துணைப் பொதுச்செயலாளர் செந்தமிழ்செல்வன், மாநில துணைத்தலைவர் தங்க ஜோதி, மாவட்டச் செயலாளர் பழனிவேல் உள்ளிட்ட பா.ம.க. நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT