Published : 02 Jan 2016 08:45 AM
Last Updated : 02 Jan 2016 08:45 AM
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, அரசு டாஸ்மாக் கடைகளில் மது விற்பனைக்கு ஆண்டுதோறும் இலக்கு நிர்ணயித்து நெருக்கடி அளிக்கும் அதிகாரிகள், இந்த புத்தாண்டில் கூடுதல் விற் பனை இலக்கு தொடர்பாக நெருக் கடி கொடுக்கவில்லை. தமிழக அரசின் இந்த ‘திடீர்’ மனமாற்றம் டாஸ்மாக் ஊழியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 6,800 டாஸ்மாக் கடைகள் உள்ளன. ஆண்டுதோறும் புத்தாண்டு, தீபா வளி உள்ளிட்ட முக்கிய நாட்களில், கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் கூடுதல் விற்பனைக்கு அதிகாரிகள் இலக்கு நிர்ணயிப்பர். இந்த நாட் களில் கூடுதலாக மது விற்பனை செய்து இலக்கை எட்ட ஊழியர் களுக்கு கடும் நெருக்கடி அளித்து உத்தரவுகளைப் பிறப்பிப்பர். அதனால், பண்டிகை நாட்களில்கூட குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட முடியாமல் டாஸ்மாக் ஊழியர்கள் மன உளைச்சலுக்கு ஆளானார்கள்.
விற்பனை இலக்கை எட்டா விட்டால் அதற்கான காரணம் குறித்து ஊழியர்களிடம் டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகள் விளக்கம் கோருவர். சென்ற ஆண்டைவிட விற்பனை குறைந்திருந்தால், கடை களை சுற்றி கலால் துறை போலீ ஸார், டாஸ்மாக் நிர்வாக அதிகாரி கள் ஆய்வு நடத்துவர். ஏற்கக்கூடிய காரணம் இருந்தால் வரும் காலத் தில் விற்பனை இலக்கை எட்ட அறிவுரை வழங்கி எச்சரிப்பார்கள். வாய்ப்புகள் இருந்தும் விற்பனை அதிகரிக்காமல் இருந்தால் ஊழியர் களுக்கு மறைமுக நெருக்கடி கொடுத்து நடவடிக்கை எடுப்பர்.
இந்நிலையில், இந்த ஆண்டு புத்தாண்டு தினத்தையொட்டி டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகள் கூடுதல் விற்பனை இலக்கு எதுவும் நிர்ணயிக்கவில்லை. தமிழக அரசின் இந்த ‘திடீர்’ மனமாற்றம் டாஸ்மாக் கடை ஊழியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து டாஸ்மாக் ஊழியர்கள் சிலர் கூறியதாவது:
கடந்த காலத்தில் பண்டிகைக் காலங்களில் கூடுதல் விற்பனை இலக்கை நிர்ணயித்து கடைகளில் குறைந்தபட்சம் 15 நாட்களுக்கான சரக்குகளை இருப்பு வைக்கச் சொல்வர்.
கடந்த ஆண்டைவிட கூடுதல் விற்பனை நடக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வர். இந்த ஆண்டு அதுபோன்ற நடவடிக்கை இல்லை. சரக்கு இருப்பு இருக்கக்கூடிய கிடங்குகளில் இருப்பும் குறை வாகவே இருந்தது.
கடந்த புத்தாண்டு தினத்தை யொட்டி, 31-ம் தேதி, 1-ம் தேதி ஆகிய இரு நாட்கள் மட்டும் ரூ.150 கோடிக்கு மேல் விற்பனை நடந்தது. இந்த ஆண்டு 31-ம் தேதி, 1-ம் தேதி ஆகிய இரு நாட்களும் சாதாரண நாட்களைப் போலவே விற்பனை நடைபெற்றது. ஊழியர்களுக்கும் நெருக்கடி தரவில்லை.
சென்னை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் இந்த ஆண்டு ரிசார்ட், நட்சத்திர ஹோட்டல்கள், கிளப்புகளில் பெரிய அளவில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்படவில்லை. அதனால், இலக்கு நிர்ணயிக்காவிட்டாலும் இந்த ஆண்டும் சாதாரணமாகவே ரூ.170 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது எனத் தெரிவித் தனர்.
மதுவிலக்கு காரணமா?
இது குறித்து ஊழியர்கள் மேலும் கூறும்போது, சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்குவதால், எதிர்காலத்தில் மதுவிலக்குக்கு சாதகமாக அரசு முடிவெடுக்க வாய்ப்புள்ளதாகப் பேசப்படுகிறது. எங்களுக்கு மாற்று அரசுப் பணிக்கு ஏற்பாடு செய்துவிட்டு, மதுவிலக்கை அமல்படுத்தினால் நாங்களும் வரவேற்கத் தயார் என்றனர்.
இது குறித்து டாஸ்மாக் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘புத்தாண்டில் கூடுதல் விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கவில்லை. இது மதுவிலக்கை அமல்படுத்துவதற்கு முன்னோட்டமா என்பது தெரியவில்லை’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT