Published : 07 Feb 2017 05:17 PM
Last Updated : 07 Feb 2017 05:17 PM
அனைத்து மக்களிடமும் ஓட்டு கேட்கும் போது, அந்த மக்களுக்கான சிறந்த வசதிகளை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளாமல் இருப்பது ஏன்? என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மதுரை கிருஷ்ணாபுரம் காலனியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் சி.ஆனந்தராஜ், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
தமிழகத்தில் உள்ள மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை உள்பட அனைத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் பைபாஸ் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கான கேத் லேப் மற்றும் ஹார்ட் லங் இயந்திர வசதி ஏற்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்து.
இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடும்போது, ''அனைத்து மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளிலும் பைபாஸ் இதய அறுவை சிகிச்சைக்கான கேத் லேப் மற்றும் ஹார்ட் லங் இயந்திர வசதியை ஏற்படுத்துவது இயலாத ஒன்று. மேலும் மனுதாரர் தொடர்ந்து பொதுநலன் வழக்கு தொடர்ந்து வருகிறார்'' என்றார்.
இதையடுத்து, பொதுநல வழக்கு தொடர்வதில் என்ன தவறு உள்ளது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ''அனைத்து மக்களிடமும் சென்று ஓட்டு கேட்கிறீர்கள். ஆனால், மக்களுக்கு தேவையான சிறந்த வசதிகளை செய்து கொடுக்க முயலாதது ஏன்?'' என்றனர்.
அதற்கு அரசு வழக்கறிஞர் பதிலளிக்கும் போது, ''ஒரு இயந்திரத்தின் விலை பல கோடி ரூபாய். இதனால் படிப்படியாகவே அரசு மருத்துவமனைகளில் இந்த வசதி ஏற்படுத்த முடியும். இந்த இயந்திரங்களை கையாள்வதற்கான சிறப்பு மருத்துவ வல்லுனர்களும் போதிய அளவில் இல்லை. நிதி நிலையை கருத்தில் கொண்டு சில அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் மட்டும் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது'' என பதிலளித்தார்.
அதற்கு, சிறப்பு மருத்துவ வல்லுநர் பணியிடங்களை நிரப்புவது அரசின் கடமை என்ற நீதிபதிகள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் செய்யப்பட்டுள்ள பைபாஸ் இதய அறுவை சிகிச்சைக்கான வசதிகள் குறித்து மருத்துவ மற்றும் கிராமப்புற சுகாதாரத்துறை இயக்குநர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை பிப் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT