Published : 15 Oct 2014 10:01 AM
Last Updated : 15 Oct 2014 10:01 AM
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள வேட்டங்குடி சரணாலயம் பறவைகள் இன்றி வெறிச்சோடி காணப்படுவதால், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின் றனர்.
வேட்டங்குடியில் பறவைகள் சரணாலயம் கடந்த 1977-ம் ஆண்டு முதல் மாநில வனத்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ளது. வேட்டங்குடிபட்டி, பெரிய கொள்ளு குடிபட்டி, சின்ன கொள்ளுகுடிபட்டி உள்ளடக்கிய மூன்று கண்மாய்கள் பறவைகள் சரணாலயத் தில் உள்ளது.
இங்கு இனப்பெருக்கத்துக்காக வெளிநாட்டிலிருந்து ஏராளமான அரியவகை பறவைகள் வருகின்றன.
இவற்றில் நாரை, செந்நாரை, சாம்பல்நிற நாரை, செங்கால் நாரை, நத்தை கொத்தி நாரை, கூழக்கடா, பாம்புதாரா, பெரிய நீர்காகம், சின்ன நீர்காகம், குளத்து கொக்கு, உண்ணி கொக்கு, சின்ன வெள்ளைக் கொக்கு, வக்கா, வெள்ளை அரிவாள் மூக்கன், கருநீல அரிவாள் மூக்கன், கரண்டி வாயன், வாத்து வகைகள் என 30-க்கும் மேலான வெளிநாட்டுப் பறவைகள் குறிப்பிடத்தக்கவை.
பருவமழை தொடங்கியும், சிவகங்கை மாவட்டத்தில் பரவலமாக மழை பெய்தும் திருப்பத் தூர் பகுதியில் குறைவான மழைப் பொழிவு காரணமாக இக்கண் மாய்களில் நீர் நிரம்பவில்லை.
இதனால் கண்டம் விட்டு கண்டம்தாண்டி வரும் வெளிநாட்டுப் பறவை கள் வேட்டங்குடி சரணாலயத்தில் தகுந்த சூழல் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்புகின்றன. இப்பறவைகளைக் காணவரும் வெளிநாட்டினரும் போதுமான பறவைகள் இல்லாததால் ஏமாற்றமடைகின்றனர்.
அவர்கள் சரணாலயத்தை ஒட்டியுள்ள கொள்ளுகுடிபட்டி கிராமத்தினரின் வாழ்வியல் முறைகளையும், சிறுவர்களின் விளையாட்டு முறைகளையும் பார்வையிட்டுச் செல்கின்றனர்.
இதுகுறித்து கிராமப் பிரமுகர் ஒருவர் கூறும்போது, ‘கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கண்மாய்களை மாவட்ட நிர்வாகம் தூர்வாரவில்லை. நாட்டுக் கருவேல மரங்கள் வறட்சியால் அழிந்து வருகின்றன.
கூடுதல் மரக்கன்றுகளை நட்டு வனப்பரப்பை அதிகரிக்க வேண்டும். தூர்ந்துபோன வரத்துக் கால்வாய்களால் நீர்நிலைகள் பெருகவில்லை. மேலும், கண்மாய்க்கு பருவமழை நீரை மட்டுமே நம்பாமல், பெரியாறு விஸ்தரிப்பு கால்வாயிலிருந்து தண்ணீர் கொண்டுவர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிரந்தரமாக தண்ணீரைத் தேக்குவதன் மூலம், பறவைகள் சரணாலயத்தை பாதுகாக்கலாம். இதன்மூலம், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையும் அதிகரிக்கும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT