Published : 01 May 2014 01:53 PM
Last Updated : 01 May 2014 01:53 PM
சென்னை சென்ட்ரல் குண்டு வெடிப்பு சம்பவம் குறித்த விசாரணை குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றி தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: "பெங்களூருவிலிருந்து கவுகாத்தி செல்லும் கவுகாத்தி விரைவு ரயில் இன்று காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தவுடன், சுமார் 7.15 மணிக்கு அதன் இரண்டு ரயில் பெட்டிகளில் குண்டு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார் என்ற செய்தியையும், 14 பேர் காயமடைந்தனர் என்ற செய்தியையும் அறிந்து துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.
இந்தக் குண்டு வெடிப்புச் சம்பவத்திற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். ரயில்வே பாதுகாப்புப் படையினருடன் இணைந்து, இந்தச் சதிச் செயலில் ஈடுபட்டவர்களை விரைந்து கண்டுபிடித்து, சட்டத்தின் முன் நிறுத்தி, அவர்களைத் தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன்.
இந்தச் சம்பவம் குறித்த விசாரணையை குற்றப் புலனாய்வுப் பிரிவு மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளேன்.
இந்தக் கொடூரச் சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தக் கொடூரச் சம்பவத்தில் காயம் அடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கவும், அவர்களுக்குத் தேவையான உதவிகளை செடீநுது தரவும் அரசு அதிகாரிகளுக்கும், மருத்துவமனை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளேன்.
காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைந்து தங்கள் இல்லங்களுக்குத் திரும்ப வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தக் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் பலியானவரின் குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும், சாதாரண காயம் அடைந்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.
எனது உத்தரவின் பேரில், இந்த ரயில் வெடிகுண்டுச் சம்பவம் குறித்து விரைந்துபுலன் விசாரணை மேற்கொண்டு இதற்கு காரணமானவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
எனவே, இந்தச் சம்பவத்தினால் தமிழக மக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம் என்றும், அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தமிழ்நாடு காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்". இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT