Last Updated : 26 Aug, 2016 11:39 AM

 

Published : 26 Aug 2016 11:39 AM
Last Updated : 26 Aug 2016 11:39 AM

சாகித்ய ரத்னா விருது பெற்று சாதனை: பஹ்ரைனில் பதக்கங்களை குவிக்கும் மதுரை சிறுமி

மத்திய கிழக்கு நாடான பஹ்ரைனில் பதக்கங்களை குவித்து பெருமை சேர்த்து வருகிறார் மதுரைச் சேர்ந்த 11 வயது சிறுமி ஸ்ரீஹம்சினி.

மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த தம்பதி பாலமுருகன், ராஜநந்தினியின் ஒரே மகள் ஸ்ரீஹம்சினி. பாலமுருகன் பஹ்ரைனில் பொறியாளராக பணிபுரிகிறார். அங்கு உள்ள இந்தியப் பள்ளியில் ஸ்ரீஹம்சினி 6-ம் வகுப்பு படிக்கிறார். ஹம்சினி, கவிதைகள் ஒப்பித்தல், பாடல், நடனம், மாறுவேடம் என பல்வேறு போட்டிகளில் வென்று 50-க்கும் மேற்பட்ட வெற்றிக் கோப்பை மற்றும் கேடயங்களை பெற்றுள்ளார்.

பஹ்ரைனில் வாழும் இந்தியர்களின் குழந்தைகளுக்காக கேரள கத்தோலிக்க சங்கம் நடத்திய போட்டியில் ‘சாகித்ய ரத்னா’ விருது பெற்றது ஸ்ரீஹம்சினியின் சமீபத்திய சாதனையாகும். பஹ்ரைனில் ஒவ்வொரு ஆண்டும் கேரள கத்தோலிக்க சங்கம் சார்பில் அங்கு வாழும் இந்தியர்களுக்கு திறமையை வெளிப்படுத்தும் விதமாக பல போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் முதலிடம் பெறுவோருக்கு ‘கலா ரத்னா’, ‘சாகித்ய ரத்னா’ விருதுகள் வழங்கப்படுகின்றன.

நடப்பு ஆண்டில் 8 முதல் 17 வயதுடைய இந்திய சிறுவர், சிறுமிகளுக்கான போட்டியில் ஸ்ரீஹம்சினி உட்பட 900-க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். இவர்களில் ஸ்ரீஹம்சினி ‘சாகித்ய ரத்னா’ விருதுக்கு தேர்வானார். பஹ்ரைன் தமிழ்ச் சங்கம் நடத்திய போட்டியில் ‘கலைச்செல்வி’ விருதும் பெற்றார்.

சமீபத்தில் மதுரைக்கு வந்த ஸ்ரீஹம்சினி, ‘தி இந்து’விடம் கூறியதாவது:

முதல் வகுப்பு பயிலும்போது பள்ளியிலும், வெளி இடங்களிலும் நடைபெறும் சிறப்பு நிகழ்வில் நிகழ்ச்சி தொகுப்பாளராக செயல்பட்டுள்ளேன்.

நான் எழுதிய கவிதை பள்ளியின் ஆண்டு இதழில் என் பெயருடன் வெளியிடப்பட்டது. ஆசியர்கள், பெற்றோர் அளிக்கும் ஊக்கம் எனக்கு உத்வேகம் தருகிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x