Published : 17 Jan 2017 01:19 PM
Last Updated : 17 Jan 2017 01:19 PM

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைதானவர்களை விடுவிக்கக் கோரி அலங்காநல்லூர், வாடிப்பட்டியில் சாலை மறியல்

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரியும் பீட்டாவுக்கு தடை கோரியும் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்ட 200-க்கும் மேற்பட்டோரை விடுவிக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

அலங்காநல்லூரில் வாடிவாசல் அருகே 5000-க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால், போக்குவரத்து முடங்கியுள்ளது. இதேபோல் கைதானவர்கள் அனைவரும் வாடிப்பட்டியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மதுரை - திண்டுக்கல் சாலையில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கைதானவர்களை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

2 கோரிக்கைகள்:

அலங்காநல்லூரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் 2 கோரிக்கைகளை முன் வைக்கின்றனர். ஒன்று, கைது செய்யப்பட்ட ஊர் மக்கள் 10 பேர் உட்பட 238 பேரை உடனடியாக விடுவிக்க வேண்டும். மற்றொன்று, தை மாதத்துக்குள் ஜல்லிக்கட்டு நடத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த இரண்டு கோரிக்கையையும் வலியுறுத்தி அலங்காநல்லூரில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.

குவிக்கப்பட்டுள்ள போலீஸார்

32 பேர் விடுவிப்பு:

இதற்கிடையில் மாவட்ட எஸ்.பி. விஜயேந்திர பிதாரி கூறும்போது, "காளைகளை அவிழ்த்துவிட்டதாக கைது செய்யப்பட்ட 32 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். எஞ்சியவர்களையும் விடுவிப்பதாக தெரிவித்துவிட்டோம். ஆனால், அவர்கள் அங்கிருந்து செல்ல மறுத்து வருகின்றனர்" என்றார்.

திரளும் கூட்டம்:

ஏற்கெனவே கைதானவர்களும், அலங்காநல்லூர், வாடிப்பட்டியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களும் வாட்ஸ் அப், ஃபேஸ்புக்கில் தகவல்களை பகிர்ந்து வருவதால் திருச்சி, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் இருந்தும் மதுரைக்கு பலரும் வந்து கொண்டிருக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x