Published : 27 Oct 2013 01:37 PM
Last Updated : 27 Oct 2013 01:37 PM

காமன்வெல்த் மாநாடு புறக்கணிப்பு அறிவிப்பை வெளியிட பிரதமருக்கு கருணாநிதி வலியுறுத்தல்

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்காது என்பதற்கான அறிவிப்பை, பிரதமர் உடனடியாக வெளியிட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று தமிழகச் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக இலங்கைத் துலீதர் கரியவாசம் கருத்து தெரிவித்திருக்கிறார். தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு கடுமையாக எதிர்க்க வேண்டிய கருத்து இது. காமன்வெல்த் மாநாட்டினை இந்தியா புறக்கணித்தால், இந்தியா தனிமைப்படுத்தப்படும் என்று இவர் டெல்லியிலே இருந்து கொண்டு கூறியிருக்கிறார்.

காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்காவிட்டால் இந்தியா உலக அரங்கில் தனிமைப்படுத்தப்படும் என்று இந்தியாவுக்கான இலங்கைத் துலீதர் கரியவாசம் கூறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. உணர்வுப்பூர்வமான முக்கிய பிரச்சினையில் இந்தியாவை மிரட்டும் வகையில் அவர் கருத்து தெரிவித்திருப்பது ஏற்கத்தக்கதல்ல.

ஒரு நாட்டின் தூதர் என்ற வரையறைக்குள் மட்டுமே அவர் கருத்து கூற வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதே கருத்தினைத்தான் மத்திய அமைச்சர் நாராயணசாமியும் வெளிப்படையாகக் கூறி அதுவும் ஏடுகளிலே வெளிவந்துள்ளது. மேலும் அவர், இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பது தொடர்பான தமிழக மக்களின் உணர்வுகள் குறித்து பிரதமரிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது என்றும் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார்.

பிரதமர் மன்மோகன் சிங் கடந்த வாரம் எனக்கு எழுதிய கடிதத்தில், காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வது பற்றி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உணர்வுகளையும், தமிழர்களின் உணர்வுகளையும் கருத்தில் கொண்டு அதன்படி செயல்படுவேன் என்றுதெரிவித்திருந்தார். இவ்வளவிற்கும் பிறகு, அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன், கரியவாசத்தைப் போல கருத்து தெரிவித்திருப்பது ஏற்கத்தக்கதல்ல.

காமன்வெல்த் மாநாட்டினைப் புறக்கணிக்கப் போவதாக இலங்கையின் வடக்கு மாகாணத்தில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் மிகப் பெரும்பான்மை மக்களின் ஆதரவோடு ஆட்சி அமைத்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டணி முடிவு செய்துள்ள நிலையில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கப்போவதாக அறிவித்திருப்பது மிகுந்த அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளிக்கின்றது.

எனவே இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு இனியும் தாமதம் செய்யாமல், காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்காது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவிப்பதே சரியாக இருக்கும் என்பதையும், பிரதமர் உடனடியாக அதற்கான அறிவிப்பினைச் செய்யும் படியும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று கருணாநிதி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x