Published : 12 Jul 2016 07:51 AM
Last Updated : 12 Jul 2016 07:51 AM
படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத் தப்படும் என்ற முதல்வரின் அறிவிப் பின்படி தமிழகத்தில் அடுத்தகட்டமாக 1,000 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப் படுகின்றன. அதற்கான ஆய்வுப்பணியை வட்டாட்சியர்கள் தொடங்கியுள்ளனர்.
தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை கடந்த ஓராண்டாக வலுத்து வருகிறது. சட்டப்பேரவை தேர்தலின்போது, இது முக்கிய பிரச்சினையாக பேசப்பட்டது. பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று திமுக, மக்கள் நலக் கூட்டணி, பாமக உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையில் அறிவித்தன. அதிமுகவோ, படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று அறிவித்தது.
இந்நிலையில், தேர்த லில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைத்தது. முதல்வராக 6-வது முறை பொறுப் பேற்ற ஜெயலலிதா, தேர்தல் வாக்குறுதியை நிறை வேற்றும் வண்ணம், முதல் கட்டமாக 500 மதுக்கடைகள் மூடப் படும் என்றும் டாஸ்மாக் கடைகள் திறக்கும் நேரம் காலை 10 மணிக்கு பதிலாக 12 மணியாக மாற்றப்படும் என்றும் அறிவித்தார்.
இந்த அறிவிப்புகள் தற்போது செயல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அடுத்தகட்டமாக 1,000 டாஸ்மாக் கடைகளை மூட அரசு முடிவு செய்துள் ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான ஆய்வு களில் தமிழகத்தின் அனைத்து வட்டாட்சி யர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக டாஸ்மாக் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில் அடுத்த கட்டமாக 1,000 டாஸ் மாக் கடைகளை மூட வேண்டும் என்று முடி வெடுக்கப்பட்டுள்ளது. மூடவேண்டிய கடை களை கணக்கெடுக்கும் பணிகளை வட்டாட்சியர்கள் தலைமையிலான குழு மேற்கொண்டு வருகிறது. மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவின்பேரில் அந்தந்த மாவட்டங்களுக்கு உட்பட்ட வட்டாட் சியர், நில அளவையர், ஆட்சியர் சார்பில் ஒரு பிரதிநிதி என 3 பேர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
ஒவ்வொரு வட்டத் திலும் உள்ள அனைத்து கடைகளுக்கும் செல்லும் இந்தக் குழுவினர், டாஸ்மாக் கடை எந்த இடத்தில் உள்ளது, அந்தக் கடையின் அருகே வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிலையங்கள், பேருந்து நிலையம் உள்ளதா என்று ஆய்வு செய்கின்றனர். அருகில் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிலையங்கள், பேருந்து நிலையம் ஆகியன இருந்தால், அவற்றுக்கும் டாஸ்மாக் கடைக்கும் எவ்வளவு தூரம் என்பதை அளந்து கொள்கின்றனர்.
இதுமட்டுமன்றி, அதிகம் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் டாஸ் மாக் கடைகளின் பட்டியலையும் காவல் துறை ஒத்துழைப்போடு கேட்டுப் பெறவுள்ளனர். அதன்பிறகு மாவட்ட ஆட்சியருக்கு வட்டாட்சி யர்கள் ஆய்வறிக்கை அனுப்புவார்கள். அவை டாஸ்மாக் தலைமை அலுவலகத்துக்கு அனுப் பப்படும். அந்த அறிக்கை யின்படி, அடுத்தகட்ட மாக சுமார் 1,000 டாஸ்மாக் கடைகள் வரை மூடப்படும். இந்த கடைகள் அதிகபட்சம் 2 மாதங்களுக்குள் மூடப்பட வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஏற்கெனவே மூடப்பட்ட 500 மதுக்கடைகள், வருவாயை கணக்கில் கொண்டு, மக்களின் விருப்பத்தைக் கேட்காமல் மூடப்பட்டதாக எதிர்க் கட்சிகள் குற்றம்சாட்டிய நிலையில், தற்போது அதிகாரிகள் நேரடியாக கடைகளுக்குச் சென்று ஆய்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் முழுவதும் 6,800 ஆக இருந்த டாஸ்மாக் மதுக்கடைகளின் எண்ணிக்கை, தற்போது 6,300 ஆக குறைந்துள்ளது. மேலும், 1,000 கடைகள் மூடப்பட்டால், டாஸ்மாக் மதுக்கடைகளின் எண்ணிக்கை 5,300 ஆக குறையும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT