Published : 03 Jan 2017 07:07 PM
Last Updated : 03 Jan 2017 07:07 PM
அதிமுக பொதுச்செயலாளரான சசிகலா கவனத்தை ஈர்க்க அவர் முதல்வராக தீர்மானம் நிறைவேற்றியும், மதுரை மாவட்டத்தின் தொகுதியொன்றில் தேர்தலில் போட்டியிட வலியுறுத்தியும் மாவட்ட அமைச்சர்கள், நிர்வாகிகள் ஒருவருக்கொருவர் போட்டிப் போட்டுக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றி தங்கள் விசுவாத்தை காட்டி வருகின்றனர்.
ஜெயலலிதா இருக்கும்போதே மதுரை மாவட்ட அதிமுகவில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் ஒரு கோஷ்டியும், முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பா தலைமையில் மற்றொரு கோஷ்டியும் செயல்பட்டனர். இருவரும் பொதுநிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொண்டாலும் கட்சி நிகழ்ச்சிகள், செயல்பாடுகளில் எதிரும், புதிருமாகவே செயல்பட்டனர். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு அமைச்சரானார்.
அதனால், இயல்பாகவே மாவட்ட அதிமுகவில் அவரது தலைமையில் மற்றொரு கோஷ்டி உருவானது. அவர் மாவட்ட அளவில் கட்சியில் முக்கியத்தும் பெற, அமைச்சர் செல்லூர் கே. ராஜூ, ராஜன்செல்லப்பாவுக்கு போட்டியாக அரசியல் செய்ய ஆரம்பித்தார். மதுரையில் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவை பிரம்மாண்டமாக நடத்தி, கட்சியினரிடம் செல்வாக்கு பெற்றார்.
இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து, மூவருக்குமான கோஷ்டி பூசல் உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது. மதுரை மாநகர் செயலாளர் அமைச்சர் செல்லூர் ராஜூ, புறநகர் மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா, போட்டிப்போட்டுக்கொண்டு கட்சி நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி, சசிகலா பொதுச்செயலாளராக வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர். அவர்களை தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் தீர்மானம் நிறைவேற்றும் படலம் தொடங்கியது.
இந்த இருவரையும் விஞ்சும் வகையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மாநில ஜெயலலிதா பேரவை கூட்டத்தை மதுரையில் கூட்டி, சசிகலா பொதுச்செயலாளராக பொறுப்பேற்பது மட்டுமின்றி அவர் முதல்வராகவும் பொறுப்பேற்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினார்.
கட்சியில் முக்கியத்துவம் பெறுவதற்காக சசிகலாவிடம் தனக்கு உள்ள விசுவாசத்தைக் காட்டும் வகையில் இருந்த அவரின் இந்த நடவடிக்கை, மற்ற அமைச்சர்கள், மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
தற்போது அவருக்கு போட்டியாக நேற்று மதுரை புறநகர் மாவட்ட கூட்டத்தை செயலாளர் ராஜன் செல்லப்பா, திருப்பரங்குன்றத்தில் அவசர அவசரமாக கூட்டி, சசிகலா முதல்வராக வேண்டும் என்றும், மதுரை மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் சசிகலா போட்டியிட வேண்டும் என்றும் அவரை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றினார்.
மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, ஓரிரு நாளில் மாநகர் கூட்டத்தைக் கூட்டி, சசிகலா முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என்றும், மதுரை மாவட்டத்தில் அவர் போட்டியிட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாக கூறப்படுகிறது.
கட்சியின் மற்ற நிர்வாகிகளும் தங்கள் பங்கிற்கு, சசிகலாவுக்கு ஆதரவாக நகர் முழுவதும் பிளக்ஸ் பேனர் வைப்பதும், போஸ்டர் அடிப்பதுமாக உள்ளனர்.
சசிகலாவிடம் தங்களுடைய விசுவா சத்தை வெளிப்படுத்தவும், அதன் மூலம் கட்சியில் முக்கியத்துவம் பெறவும், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்களும், நிர்வாகிகளும் ஒருவருக்கொவர் போட்டிப் போட்டுக்கொண்டு செயல்படுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT