Published : 07 Mar 2017 12:09 PM
Last Updated : 07 Mar 2017 12:09 PM
இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் பலியான மீனவர் பிரிட்ஜோவின் உடலை வாங்க மறுத்து தங்கச்சிமடத்தில் தொடர் தர்ணாவை மீனவர்கள் துவக்கி உள்ளனர்.
ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் திங்கட்கிழமை கடலுக்குச் சென்றனர். இரவு 10 மணியளவில் கச்சத்தீவு அருகே தங்கச்சிமடத்தைச் சார்ந்த தாசன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் படகில் பிரிட்ஜோ, ஜெரோன், அந்தோனி, கிளிண்டஸ், சாம் பிரிட்ஜோ, ரிமோட்சன் ஆகிய 6 மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையின் ரோந்து கப்பலிலிருந்து நான்கு வாட்டர் ஸ்கூட்டர் பைக்குகளிலிருந்த கடற்படையினர் வானத்தை நோக்கிச் சுட்டவாறு தாசனின் படகினை சுற்றி வளைத்தனர். பின்னர் படகை நோக்கிச் சுட்டதில் படகிலிருந்த பிரிட்ஜோ (21) என்ற மீனவரின் கழுத்தில் குண்டடிப்பட்டு மயங்கி விழுந்தார். மேலும் படகின் டிரைவர் ஜெரோனுக்கு தொடையில் காயம் ஏற்பட்டது. படகில் இருந்த மற்ற மீனவர்கள் கடலோர காவல்படையினரை உதவிக்காக தொடர்பு கொண்டனர். ஆனால் கடலோர காவல்படையின் உதவி கிடைக்காததால் காயத்துடன் டிரைவர் ஜெரோன் படகினை கரையை நோக்கி திருப்பினார்.
மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடைபெற்ற தகவல் கிடைத்ததும் ராமேசுவரம் மீன்பிடித் துறைகமுகத்தில் இரவு 11 மணியிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் உறவினர்கள் திரளத் தொடங்கினர்.
கரையை அடைவதற்கு முன்னதாகவே நடுவழியில் பிரிட்ஜோவின் உயிர் பிரிந்தது. நள்ளிரவு 12 மணியளவில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பிரிட்ஜோவின் உடல் ராமேசுவரம் மீன்பிடித் துறைகத்திற்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. காயமடைந்த மீனவர் ஜெரோனுக்கு ராமேசுவரம் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேற்சிகிச்சைக்காக ராமநாதபுரம் தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முன்னதாக கடந்த 2011 ஏப்ரல் 2 அன்று உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இலங்கை அணியை இந்திய அணி வென்றது. இதனால் ஆத்திரமடைந்த இலங்கைக் கடற்படையினர் அன்றிரவு பாக்ஜலசந்தி கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தங்கச்சிமடம் மீனவர்கள் விக்டஸ், ஜான்பால், மாரிமுத்து, அந்தோணிராஜ் ஆகிய 4 பேரை துப்பாச்சிச்சூடு மூலம் படுகொலை செய்தனர்.
மீனவர் பிரிட்ஜோவின் படுகொலையைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை தங்கச்சிமடத்தில் விசைப்படகு மீனவர்களின் அவசரக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய படுகொலைக்கு நீதி கிடைக்கும் வரை காலவரையற்ற வேலை நிறுத்ததில் ஈடுபடுவதாகவும், மார்ச் 11, 12 ஆகிய இரு தினங்களில் நடைபெற உள்ள கச்சத்தீவு திருவிழாவைப் புறக்கணிப்பதாகவும் அறிவித்துள்ளனர்.
மேலும் மத்திய அமைச்சர்கள் வரும்வரையில் உயிரிழந்த மீனவர் உடலை வாங்க மாட்டோம் என அறிவித்து தங்கச்சிமடத்தில் மீனவர்கள் தர்ணாப் போராட்டத்தை துவக்கி உள்ளனர்.
ராமேசுவரத்தில் மீனவர் பிரிட்ஜோ படுகொலையைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பாக செவ்வாய்க்கிழமை காலை செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT