Published : 18 Jun 2017 09:31 AM
Last Updated : 18 Jun 2017 09:31 AM

கோவை மார்க்சிஸ்ட் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: இப்தார் நிகழ்ச்சி நடத்துவது காரணமா?- புதிய பரபரப்பு

கோவை மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சுக்கு காரணம் தோழர்கள் மதநல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடத்துவது கூட இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் புலன் விசாரணையை முடுக்கி விட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கோவை 100 அடி சாலை அருகே உள்ள மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகம் மீது நேற்று காலை பெட்ரோல் குண்டுகளை மர்ம நபர்கள் வீசிச் சென்றதன் பின்னணியில் இந்துத்வா சக்திகள் இருப்பதாக போலீஸில் தெரிவித்துள்ளனர் அக்கட்சியினர். 9 ஆண்டுகளுக்கு முன்பு அகில இந்திய தொழிற்சங்க மாநாடு நடந்தபோது இதே மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்தது. அது போலீஸில் புகார் செய்யப்பட்டு மிரட்டல் கடிதம் அனுப்பிய நபர்கள் கண்டுபிடிக்கப் படவில்லை.

அதேபோல் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆவராம்பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ஒரு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அதில் அங்குள்ள பந்தலின் ஒரு பகுதி எரிந்தது. மர்ம நபர்கள் இந்துத்வா சார்ந்தவர்கள் என்று கூறப்பட்டதே ஒழிய யாரும் கைது செய்யப்படவில்லை. அதன்பிறகு நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் ஆகும் இது.

டெல்லியில் சீதாராம் யெச்சூரி மீது தாக்குதல் முயற்சி நடந்தது. அதைப்போலவே அச்சுறுத்தல் நோக்கோடு நடந்த ஒரு வன்முறை செயல் இது என்று கண்டிக்கிறார்கள் தோழர்கள். 'இந்த முறையிலான தாக்குதல் மற்றும் அச்சுறுத்தல் கேரள மாநிலம் கண்ணூர் பகுதியில்தான் தொடர்ந்து நடந்துள்ளது. அங்குள்ள எங்கள் கட்சி அலுவலகங்களை இந்துத்வா சக்திகள் தாக்குதலுக்கு உள்ளாக்குவது இதே முறையில்தான் அதுவே தற்போது கோவைக்கும் வந்துள்ளது!' என தி இந்துவிடம் தெரிவித்தார் மார்க்சிஸ்ட் கட்சி சேர்ந்த முன்னாள் கோவை எம்.பி. பி.ஆர்.நடராஜன்.

இவர் இப்படி தெரிவித்தாலும், கோவை ராம்நகரில் உள்ள ஓர் ஓட்டலில் இன்று மாலை (18.06.2017) சிறுபான்மை மக்கள் குழு என்ற பெயரில் ஒரு மதநல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சிக்கு மஸ்ஜீதே இப்ராஹீம், தலைமை இமாம் அல்ஹாஜ் எம்.ஏ.அப்துல்ரஹீம் இம்தாதி பாக்கவி, திருமுருகன் பூண்டி சுந்தரராச அடிகளார், கோவை முதன்மை மறை மாவட்ட முதன்மை குரு ஜான் ஜோசப் ஸ்தனிஸ், பி.ஆர் நடராஜன் முன்னாள் எம்.பி உள்பட பலர் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். நோன்பு திறப்பு, இறைவழிபாடு, சிறப்புரை, விருந்து என குறிப்பிடப்பட்டுள்ள இந்த ஏற்பாட்டை மார்க்சிஸ்ட் கட்சியினரே 1000 அழைப்பிதழ்கள் அச்சடித்து ஏற்பாடு செய்துள்ளனர்.

சிறுபான்மை மக்கள் நலக்குழு என்ற பெயரில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், இதன் பின்னணியில் இயங்குவது முழுக்க மார்க்சிஸ்ட் கட்சியினரே என்பது உள்ளூர் போலீஸ் முதல் அடிப்படை வாத இயக்கங்களுக்கும் தெரிந்தே உள்ளது.

'சென்னையில் இதேபோன்ற ஒரு நிகழ்ச்சியை 2 நாட்கள் முன்பு மார்க்சிஸ்ட் கட்சி அனுதாபிகள் செய்தார்கள். அதில் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் போய் கலந்து கொண்டார்கள். அது போலவே இங்கே கட்சி தோழர்கள் முன்னின்று நடத்துகிறார்கள். அதற்கு எதிர்ப்பு காட்டும் முகமாகக்கூட இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்திருக்கலாம் என்று யோசிக்கிறோம். அந்த வகையிலும் நாங்கள் விசாரித்து வருகிறோம்!' என்று தெரிவித்தார் மார்க்சிஸ்ட் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான சி.பத்மநாபன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x