Published : 23 Feb 2014 12:00 AM
Last Updated : 23 Feb 2014 12:00 AM
திருநெல்வேலியில், சனிக்கிழமை கார் தீப்பிடித்து எரிந்ததில், மனைவி மற்றும் மகளுடன் ரியல் எஸ்டேட் அதிபர் பலியானார். கடன் தொகை வசூல் ஆகவில்லை என்பதால் காருக்கு தீவைத்து, குடும்பத்தினருடன் அவர் தற்கொலை செய்து கொண்டதாக, போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
காரில் தீ
திருநெல்வேலி - திருச்செந்தூர் சாலையில் வி.எம்.சத்திரத்தை அடுத்த ஆச்சிமடம் பகுதியில், சனிக்கிழமை மாலையில் கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்தது. அக்கம்பக்கத்தினர் போலீஸாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
பாளையங்கோட்டை தீயணைப்பு படையினர் விரைந்து சென்று, தீயை அணைத்தனர். காரில் 3 பேர் உடல் கருகி, உருத்தெரியாமல் கிடந்தனர். சடலங்களை மீட்டு, பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.
தீப்பிடித்து எரிந்த கார் எலும்புகூடாக காட்சியளித்தது. அதன் மேற்கூரை 20 அடிதூரம் வீசப்பட்டு கிடந்தது. உடல் கருகி இறந்தவர்கள் பாளையங்கோட்டை வி.எம். சத்திரத்தை சேர்ந்த பிரபல கட்டிட ஒப்பந்ததாரர் சுடலைமுத்து பிள்ளையின் மகன், ரியல் எஸ்டேட் அதிபர் கண்ணன் என்ற பரிபூரணம் (40), அவரது மனைவி மல்லிகா (33) மற்றும் அவர்களது மகள் சுமதி (13) என தெரிந்தது.
தற்கொலையா?
இவர்கள் பாளையங்கோட்டை கே.டி.சி. நகர், ரவிசங்கர் நகரில் வசித்து வந்தனர். கடன் தொகை வசூல் ஆகவில்லை என்பதால் காருக்கு தீவைத்து தற்கொலை செய்ததாக பெருமாள்புரம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
பரிபூரணம், தூத்துக்குடி மாவட்டம், ஏரலை சேர்ந்த இரு பைனான்சியர்கள் மற்றும் பாளையங்கோட்டை தியாகராஜநகரைச் சேர்ந்த மற்றொரு பைனான்சியருக்கு, ரூ. 2 கோடி வரை கடன் கொடுத்திருந்தார். அதற்கான வட்டியை குறிப்பிட்ட சில மாதங்களுக்கு மட்டும் அவர்கள் மூவரும் கொடுத்துள்ளனர். பின்னர் வட்டியும் கொடுக்கவில்லை.
இதுதொடர்பாக ஏரல் போலீஸில் பரிபூரணம் புகார் செய்தார். ‘தன்னிடம் இருந்த பணம் மற்றும் சிலரிடம் திரட்டிய பணத்தை கடனாக கொடுத்திருந்ததாகவும், பணத்தையும்; வட்டியையும் வசூல் செய்துதர நடவடிக்கை எடுக்குமாறு’ புகாரில் தெரிவித்திருந்தார்.
ஆனாலும், கடன் தொகை திரும்ப கிடைக்கவில்லை. இதனிடையே, ‘கடன் தொகையை கேட்டு கண்ணன் என்ற பரிபூரணம் தங்களை தொல்லை செய்வதாக’ பைனான்சியர்களும் பதிலுக்கு போலீஸில் புகார் கொடுத்தனர்.
பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினையால் பரிபூரணம் மன உளைச்சலுக்கு ஆளாகி, குடும்பத்துடன் தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்திருக்கிறார். இதற்காக மனைவி, மகளை காரில் அழைத்து சென்ற அவர், காஸ் சிலிண்டரை திறந்து, தீ வைத்துக் கொண்டார்’ என போலீஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில், மேலும் பல்வேறு விவகாரங்கள் மறைந்து இருப்பதாக கே.டி.சி. நகர் பகுதி மக்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT