Published : 18 Oct 2013 10:28 AM Last Updated : 18 Oct 2013 10:28 AM
அமெரிக்க கப்பல் விவகாரத்தில் தொடரும் மர்மம்: கியூ, ரா அமைப்புகள் விசாரணை
தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள அமெரிக்க கப்பல் தொடர்பாக கியூ பிரிவு எஸ்.பி. பவானீஸ்வரி இரண்டாவது நாளாக வியாழக்கிழமை தீவிர விசாரணை நடத்தினார். மேலும் மத்திய அரசின் உளவு அமைப்பான ரா அதிகாரிகளும் இந்த கப்பல் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி கடல் பகுதிக்கு ஆயுதங்களுடன் வந்த அமெரிக்காவின் அட்வன் போர்ட் என்ற தனியார் கடல் பாதுகாப்பு நிறுவனத்துக்கு சொந்தமான சீமேன் கார்டு ஓகியோ என்ற கப்பலை இந்திய கடலோர காவல் படையினர் கடந்த 11-ம் தேதி இரவு மடக்கி பிடித்தனர். அக்கப்பல் கடந்த 12-ம் தேதி முதல் தூத்துக்குடி துறைமுகத்தின் 2-வது கப்பல் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பலில் 25 பயிற்சி பெற்ற தனியார் பாதுகாவலர்கள், 10 கப்பல் மாலுமிகள் உள்ளனர். மேலும், அதிநவீன துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களும் உள்ளன. இது தொடர்பாக தருவைகுளம் கடலோர காவல் நிலைய போலீஸார் முதலில் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். பின்னர் இந்த வழக்கு கியூ பிரிவுக்கு மாற்றப்பட்டது.
சிறைப்பிடித்து வைக்கப்பட்டு உள்ள கப்பலில் கியூ பிரிவு எஸ்.பி. பவானீ்ஸ்வரி கேப்டன் உள்ளிட்டோரிடம் வியாழக்கிழமை தீவிர விசாரணை நடத்தினார். மேலும், கப்பலில் உள்ள தகவல் தொடர்பு சாதனங்களை ஆய்வு செய்து, இந்த கப்பல் இதற்கு முன்பு எங்கெல்லாம் சென்றுள்ளது என்ற விவரங்களையும் சேகரித்தார்.
கப்பலில் ஆயுதம் வைத்திருந்த தற்கான ஆவணங்களும் அவர்க ளிடம் முறையாக இல்லை என அதிகாரிகள் கூறினர். இதனால் விசாரணை முடிவு பெறாமல் தொடர்ந்து வருகி றது. கியூ பிரிவு போலீஸார் இரண்டு நாள்களாக நடத்திய விசாரணையில் சில தகவல்கள் கிடைத்துள்ளன. இருப்பினும் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் எதுவும் ஏற்படாததால் கப்பல் தொடர்பான மர்மம் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இதற்கிடையே இந்த விஷயத்தில் மத்திய அரசின் உயர்மட்ட உளவு அமைப்பான ரா பிரிவும் விசாரணையில் இறங்கியுள்ளது. ரா பிரிவைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் வியாழக்கிழமை தூத்துக்குடிக்கு வந்து விசாரணை நடத்தி வருவதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
ரா பிரிவும் விசாரணையில் ஈடுபட்டுள்ளதால் இந்த கப்பல் தொடர்பாக மேலும் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. இந்த விஷயத்தில் என்ன நடக்கிறது என்பதை மத்திய அரசோ, விசாரணை அமைப்புகளோ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டால் மட்டுமே உண்மை வெளிவரும். அதுவரை யூகங்களே உலா வரும்.
கப்பல் விடுவிக்கப்படுமா?
இதனிடையே, தூத்துக்குடி அருகே பிடிபட்ட அமெரிக்க கப்பல் இந்திய எல்லைக்கு அப்பால் நின்றிருந்ததாக நிரூபிக்கப்பட்டால் சட்டரீதியாக எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் நேச்சல் சாந்து தெரிவித்தார்.
இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை பேட்டியளித்த அவர், "12 கடல் மைல் தொலைவு மட்டுமே இந்திய எல்கைக்கு உள்பட்டது. அதை தாண்டி எது நடந்தாலும் நமது கட்டுப்பாட்டுக்குள் வராது. அண்மையில் பிடிபட்ட அமெரிக்க கப்பலுக்கும் இது பொருந்தும்.
அந்தக் கப்பல் இந்திய எல்லைக்கு அப்பால் என்ன செய்திருந்தாலும் நமது சட்ட வரம்புக்குள் வராது. கப்பலில் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது உண்மை தான். அதில், அரசியல்ரீதியாக எந்தத் தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை. இந்த விவகாரத்தில் விசாரணை அதிகாரிகள் தங்கள் கடமையை செய்வார்கள்" என்றார்.
இந்தியாவுக்கு நன்றி!
இதனிடையே, சீமேன் கார்டு ஓகியோ கப்பலின் உரிமையாளரான அட்வன்போர்ட் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவர் வில்லியம் எச். வாட்சன் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். பைலின் புயலில் இருந்து தப்பிக்கவும் எரிபொருள் நிரப்பவும் அனுமதி அளித்த இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சீமேன் கார்டு ஓகியோ கப்பல் விரைவில் தனது பாதுகாவல் பணிக்குத் திரும்பும் என நம்புகிறேன் என்று அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
WRITE A COMMENT