Published : 27 Feb 2017 04:35 PM
Last Updated : 27 Feb 2017 04:35 PM
கடந்த 8 ஆண்டுகளில் மருத்துவ படிப்பிற்கான 29,225 எம்.பி.பி.எஸ் இடங்களில் அரசு பள்ளி மாணவர்கள் 278 பேர் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் அறியும் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் வெங்குளத்தை சார்ந்த சமூக ஆர்வலர் தே. ராஜு. இவர் கடந்த 2009-2010 கல்வியாண்டு முதல் 2016-2017 கல்வியாண்டு வரையிலான 8 ஆண்டுகளில் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் நிர்யணிக்கப்பட்ட எம்.பி.பி.எஸ் படிப்பிற்கான மொத்த இடங்கள் எத்தனை? இதில் சேர்க்கை பயனுற்ற அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை எத்தனை? குறித்த தகவல்களை சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் பொது தகவல் வழங்கும் அதிகாரியுடம் தகவல் அறியும் சட்டம் மூலம் கோரியிருந்தார்.
இதற்கு தகவல் அறியும் உரிமை சட்டம் 2005-ன்படி எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்தின் பொதுத் தகவல் அதிகாரி அளித்த தகவல் விவரம் வருமாறு, கடந்த 2009-2010 கல்வியாண்டு முதல் 2016-2017ம் கல்வியாண்டு வரையிலுமான 8 ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளின் எம்.பி.பி.எஸ் மாணவர்கள் சேர்க்கை மொத்தம் 29,225 ஆகும். , இதில் அரசு மருத்துவக் கல்லூரியில் 213 மாணவர்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 65 மாணவர்கள் என மொத்தம் 278 அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் எம்.பி.பி.எஸ் சேர்ந்துள்ளனர், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர் ராஜு கூறும்போது, "தமிழகத்தில் ஆண்டுக்கு 8 லட்சம் மாணவர்கள் 12ம் வகுப்பு பள்ளிக் கல்வியை முடித்து வெளியே வருகின்றனர். இதில் 60 சதவீதம் பேர் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்தவர்கள் ஆவர். மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர 12ம் வகுப்பு மதிப்பெண்ணில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் நேரடியாக சேர்க்கை நடைபெறுகிறது.
இதனடிப்படையில் கடந்த 9 ஆண்டுகளில் 29,225 சேர்க்கப்பட்ட எம்.பி.பி.எஸ் மாணவர்களில் வெறும் 278 மாணவர்கள் மட்டுமே அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களாக உள்ளனர். அதாவது வெறும் 1 சதவீதம் மாணவர்கள் மட்டுமே அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்கள். இதில் அரசு பள்ளியை காட்டிலும், தனியார் பள்ளிகளில் பயின்ற 99 சதவீதம் பேர் மருத்துவக்கல்லூரியில் சேரும் வாய்ப்பை பெறுகின்றனர்.
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் பள்ளிக் கல்வித் துறைக்கு மட்டும் சுமார் ரூ.85000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆயினும் தொடர்ந்து அரசு பள்ளிகளின் கல்வித்தரம் குறைந்து கொண்டே போகிறது. இதனால் அரசு பள்ளிகளில் பயிலும் பெருன்பான்மையான ஏழை மாணவர்களுக்கு மருத்துவர் ஆக வேண்டும் என்பது வெறும் கனவாகவே உள்ளது.
இந்நிலையில் எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்த இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தமிழகம் 12-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மருத்துவப் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இதனால் அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை என்பது தமிழகத்தில் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களை மேலும் பாதிக்கும்.
எனவே அரசுப் பள்ளியின் கல்வித் தரத்தை உயர்த்துவதுடன் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ் படிப்பில் சிறப்பு இடஒதுக்கீடும் வழங்க வேண்டும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT