Published : 01 May 2014 10:37 AM
Last Updated : 01 May 2014 10:37 AM
ரப்பர் விலை ஓராண்டாக கடுமையாக வீழ்ச்சியடைந்து வருவதால், ரப்பர் பயிர் சாகுபடியை பிரதானமாக நம்பி இருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 40,000 தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
தமிழகத்திலேயே அதிக அளவில் ரப்பர் சாகுபடி நடைபெறும் பகுதி கன்னியாகுமரி மாவட்டம். 30,000 ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் இங்கு ரப்பர் சாகுபடி நடைபெறுகிறது.
இந்திய அளவில் தரமான இயற்கை ரப்பர் கன்னியாகுமரி மாவட்டத்தில்தான் விளைகிறது. இந்தியா முழுவதுக்கும் தேவையான ரப்பர் நாற்று இங்கிருந்துதான் செல்கிறது. ஆனால், ரப்பர் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் ரப்பர் ஆராய்ச்சி மையமும், ரப்பர் தொழிற்சாலையும் வேண்டும் என்ற கன்னியாகுமரி மாவட்ட ரப்பர் விவசாயிகளின் கோரிக்கை மட்டும் நீண்டகாலமாக நிறைவேறாமல் உள்ளது.
பால் வெட்டு நிறுத்தம்
இப்படி பல்வேறு வகைகளில் சிக்கலில் இருந்த ரப்பர் விவசாயிகளின் வாழ்வில், இப்போது மேலும் ஒரு இடியாய் இறங்கியிருக்கிறது ரப்பர் விலை வீழ்ச்சி. கடந்த இரண்டு ஆண்டுகளுக்குமுன், ஒரு கிலோ 240 ரூபாயாக இருந்த ரப்பர், இப்போது கிலோ 141 ரூபாயாக குறைந்துள்ளது.
இதனால், ரப்பர் பால் வெட்டினாலும் லாபம் இல்லை எனக்கருதி, ரப்பர் பால் வெட்டுவதை தோட்ட முதலாளிகள் நிறுத்தி வைத்துள்ளனர். பால் வெட்டும் தொழிலாளர்களின் குடும்பம் இப்போது வறுமையில் வீழ்ந்துள்ளது.
ஓராண்டாக விலை வீழ்ச்சி
கேரளாவில் கோட்டயம் மற்றும் கொச்சியில்தான், ரப்பர் விலை நிர்ணயச் சந்தை இயங்குகிறது. இங்கு 2013-ம் ஆண்டில் அதிகபட்சமாக ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் ஆர்எஸ்எஸ்-4 ரக ரப்பர் ஒரு கிலோ ரூ. 196-க்கு விற்றது. செப்டம்பரில் ரூ. 187, அக்டோபரில் ரூ. 168, 2014-ம் ஆண்டு ஜனவரியில் ரூ. 163, பிப்ரவரியில் ரூ. 155, மார்ச்சில் ரூ. 150 என வீழ்ச்சியடைந்தது. செவ்வாய்க்கிழமை (ஏப். 29) குறைந்த அளவாக ரூ. 141-க்கு விலை போனது. ஆர்எஸ்எஸ்-5 ரகம் ரூ. 137, ஐ.எஸ்.என்.ஆர். ரகம் ரூ. 130, ரப்பர் பால் ரூ. 112-க்கு விற்றது.
கூலிக்கே போதாது
கன்னியாகுமரி ரப்பர் விவசாயிகள் சங்க செயலாளர் ராமச்சந்திரன் கூறியதாவது:
மத்திய, மாநில அரசுகளின் பொருளாதாரக் கொள்கையால் வெளிநாடுகளில் இருந்து ரப்பர் இறக்குமதி செய்யப்படுகிறது. இதற்கான சுங்க வரியும் குறைவாக உள்ளதால் ரப்பர் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் ரப்பர் பால் வெட்டுவதை தோட்ட முதலாளிகள் நிறுத்திவிட்டனர். தொழிலாளர்களுக்கு கூலி கொடுப்பதற்கே தற்போதைய விலை போதுமானதாக இருக்காது. இதனால் நேரடியாகவும் மறைமுகமாகவும் 40,000 தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர் என்றார்.
அரசு உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட்டு துவண்டு கிடக்கும் தொழிலாளர் குடும்பங்களை வாழ வைக்க வகை செய்ய வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தொழிலாளர்களின் கோரிக்கை.
கோட்டயத்தில் எதிரொலி
ரப்பர் விலை ஓராண்டாக வீழ்ச்சி யடைந்து வருவது, மக்களவைத் தேர்தலில் முக்கிய பிரச்சினையாக கேரளாவில் பேசப்பட்டது. குறிப்பாக, கோட்டயம் தொகுதி தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிடும் தற்போதைய எம்.பி. ஜோஸ் கே.மணிக்கு எதிராக இப்பிரச்சினை வெடித்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT