Published : 19 Mar 2014 08:59 PM
Last Updated : 19 Mar 2014 08:59 PM

எனது ஆதரவாளர்கள் எதற்கும் அஞ்சமாட்டார்கள்

எனது ஆதரவாளர்கள் எதற்கும் அஞ்சமாட்டார்கள் என திமுக பொதுச்செயலாளர் அன்பழகனின் அறிக்கைக்கு மு.க. அழகிரி பதிலளித்துள்ளார்.

திமுக தென்மண்டல அமைப்புச் செயலாளர் பதவியில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட மு.க.அழகிரி திங்கள்கிழமை மதுரையில் தனது ஆதரவாளர்களின் கருத்து கேட்புக் கூட்டத்தை நடத்தினார். அப்போது அவர் பேசுகையில், ‘திமுக வேட்பாளர்கள் தலைவர் கருணாநிதியால் தேர்வு செய்யப்பட்டவர்கள் அல்ல. அவர்களை மாற்றிவிட்டு வேறு வேட்பாளர்களை அறிவிக்க வேண்டும் என்றார். இது திமுக தலைமைக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதைத் தொடர்ந்து, திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில், ‘மு.க. அழகிரி திமுகவில் குழப்பம் ஏற்படுத்த முயற்சிப்பதாகவும், அவருடன் தொடர்பு வைத்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீதும் உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்’என அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து, மு.க. அழகிரி வீட்டு முன் புதன்கிழமை செய்தியாளர்கள் குவிந்தனர். பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரை அவர் செய்தியாளர்களை சந்திக்கவில்லை. அவர்களும் கலைந்து செல்வதாக இல்லை. இதையடுத்து, மு.க. அழகிரி, வீட்டைவிட்டு வெளியே வந்தார். நான் சொல்வதை மட்டும் கேளுங்கள். வேறு எந்த கேள்வியும் வேண்டாம் என்ற நிபந்தனையுடன் அவர் கூறியதாவது:

என்னுடைய ஆதரவாளர்கள் பனங்காட்டு நரி. எதற்கும் அஞ்சமாட்டார்கள். இந்த பூச்சாண்டி காட்டும் வேலைக்கெல்லாம் பயப்பட மாட்டார்கள். கட்சிப் பதவிக்கும், காசு, பணத்துக்கும் ஆசைப்பட்டவர்கள்தான் அங்கே இருக்கின்றனர். இவ்வாறு பேசிய மு.க. அழகிரி, வேறு எந்த கேள்விக்கும் பதில் அளிக்காமல் வேகமாக வீட்டுக்குள் சென்று விட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x