Published : 03 Feb 2014 12:00 AM
Last Updated : 03 Feb 2014 12:00 AM

ஆயுள் தண்டனை கைதியை மணந்த பெண் வக்கீல்- போலீஸ் பாதுகாப்புடன் திருமணம்

ஆயுள் தண்டனை கைதியை பெண் வக்கீல் திருமணம் செய்து கொண்டார். போலீஸ் பாதுகாப்புடன் இந்த திருமணம் நடந்தது.

சென்னை வியாசர்பாடி பி.வி. காலனி 9–வது தெருவை சேர்ந்தவர் சோமு. அடிதடிகளில் ஈடுபட்டு பிரபல ரவுடியாக பெயர் எடுத்தார். எம்.கே.பி. நகர், வியாசர்பாடி, செங்குன்றம், எண்ணூர், நுங்கம்பாக்கம் ஆகிய காவல் நிலையங்களில் இவர் மீது ஏழு கொலை வழக்குகள் மற்றும் கொலை முயற்சி, ஆள்கடத்தல், வெடி குண்டு வீச்சு வழக்குகள் உள்ளன.

முன்னாள் எம்.எல்.ஏ. எம்.கே.பாலன் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று புழல் சிறையில் சோமு அடைக்கப்பட்டார்.

சோமுவின் மீதான வழக்குகளை நடத்தி வரும் வழக்கறிஞரிடம் அருணா (30) என்ற வழக்கறிஞர் ஜூனியராக பணியாற்றுகிறார். வழக்கு தொடர்பான தகவல்களை சேகரிக்கவும், விவாதிக்கவும் அருணா அடிக்கடி சிறைக்கு சென்று சோமுவை சந்தித்து வந்தார். அப்போது, அவர் ரவுடியான கதை, வழக்குகளில் சிக்கி வாழ்க்கையை தொலைத்த கதை அனைத்தையும் அருணாவிடம் மனம் திறந்து பேசினார். ரவுடி என்ற போர்வைக்குள் மறைந்து இருந்த சோமுவின் இதயம் அருணாவை ஈர்த்தது. அதுவே காதலாக மலர்ந்தது.

இந்நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். பத்து ஆண்டுகளாக சிறைக்குள் இருக்கும் சோமு, சிறைக்குள் எந்த விதமான வம்பு தும்பிலும் ஈடுபடவில்லை. இது அவரது திருமணத்துக்கு 10 நாள் விடுமுறையை பெற்றுக் கொடுத்தது. விடுமுறையில் வீட்டுக்கு வந்த சோமுவிடம் ஏற்பட்டு இருந்த மாற்றத்தை பார்த்து உறவினர்கள் அதிசயித்து போனார்கள்.

போலீஸ் பாதுகாப்புடன் வியாசர்பாடி பி.வி.காலனியில் உள்ள பீலிக்கான் முனீஸ்வரர்– அங்காளேஸ்வரி கோவிலில் சோமுவுக்கும், வழக்கறிஞர்அருணாவுக்கும் ஞாயிற்றுக் கிழமை காலையில் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் பங்கேற்க பத்திரிகையாளர்களுக்கு அனுமதியில்லை.

திருமணம் முடிந்த பிறகும் யாரும் புகைப்படம் எடுத்துவிட கூடாது என்பதற்காக குடைகளை வைத்து முகத்தை மறைத்த படி புதுமண தம்பதிகள் காரில் ஏறி சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x