Published : 29 Mar 2014 12:00 AM
Last Updated : 29 Mar 2014 12:00 AM
சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான அனுமதி இல்லாததாலும் குழந்தைகளுக்கு தொடர்ந்து டயாலிசிஸ் செய்ய முடியாததாலும் ஆண்டுக்கு 100 குழந்தைகள் பரிதாபமாக இறக்கின்றன. கடந்த 28 ஆண்டுகளாக இந்த நிலை நீடிக்கிறது.
தென்கிழக்கு ஆசியாவிலேயே குழந்தைகளுக்கான மிகப்பெரிய மருத்துவமனை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை. மாநிலத்திலேயே சிறுநீரக சிகிச்சைக்கு தனித் துறை இருக்கும் ஒரே அரசு மருத்துவமனை. பிறந்த குழந்தை முதல் 12 வயது வரையி லான ஆயிரக்கணக்கான ஏழை குழந்தைகள் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரம், கர்நாடகத்தில் இருந்தும் இங்கு வருகின்றனர்.
இரண்டே டாக்டர்கள்
இந்த மருத்துவமனையில் சிறு நீரகவியல் மருத்துவப் பிரிவில் 2 டாக்டர்கள் உள்ளனர். இந்த துறை யில் ஓர் ஆண்டுக்கு சுமார் 5 ஆயிரம் குழந்தைகள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். 2 வாரத்துக்கு ஒருமுறை 400-க்கும் மேற்பட்ட குழந்தைகள் புறநோயாளிகள் பிரிவில் தொடர் சிகிச்சை எடுத்துச் செல்கின்றனர்.
ஆண்டுதோறும் புதிதாக சுமார் 1,000 குழந்தைகள் சிறுநீரக பிரச்சினையுடன் சிகிச்சைக்கு வரு கின்றன. இதில் சராசரியாக 100 குழந்தைகள் சிறுநீரகங்கள் செய லிழந்த நிலையில் உள்ளன. இவர் களுக்கு தொடர்ந்து டயாலிசிஸ் செய்ய வேண்டி உள்ளது.
சிறுநீரகம் கிடைப்பதில்லை
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தால் இதில் 50 குழந்தைகளை காப்பாற்ற முடியும். அதற்கான வசதிகள் இங்கு இல்லை. அதனால் சிறுநீரகத்துக் காகவும் மாற்று அறுவைச் சிகிச்சைக்காகவும் மற்ற அரசு மருத்துவமனைகளில் பதிவு செய்ய வேண்டியுள்ளது. மூளைச் சாவு அடைந்தவரிடம் இருந்து உடல் உறுப்பு தானம் மூலம் குழந்தைகளுக்கு சிறுநீரகம் கிடைப்பதில்லை. தாய் அல்லது தந்தைதான் கொடுக்கவேண்டி யுள்ளது. அவர்கள் கொடுக்க முன்வந்தாலும், போதிய வசதிகள் இல்லாததால் குழந்தைகளுக்கு உடனே மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவதில்லை.
ஊசியால் பாதிப்பு
அறுவை சிகிச்சை வரை டயாலிசிஸ் செய்யவேண்டி உள்ளது. டயாலிசிஸின்போது குழந்தைகளின் கையில் ஊசி குத்தும் இடத்தில் உள்ள ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுகிறது. ஒரு சில குழந்தைகளுக்கு அந்த இடம் செயலிழந்து விடுகிறது. தொடர்ந்து டயாலிசிஸ் செய்ய முடியாத நிலை உண்டாகிறது.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ஏற்படும் தாமதம், தொடர்ந்து டயாலிசிஸ் செய்ய முடியாத நிலை, சிறுநீரகங்கள் செயலிழப்பு ஆகிய காரணங்க ளால் சராசரியாக ஆண்டுக்கு 100 குழந்தைகள் இறந்துவிடுகின்றன. பெரிய அரசு மருத்துவமனைகளில் பதிவு செய்ததன் மூலம் இதுவரை 2 அல்லது 3 குழந்தைகளுக்கு மட்டுமே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக டாக்டர்கள் மேலும் கூறுகையில், ‘‘இந்த மருத்துவமனையில் சிறுநீரகவி யல் துறை 1986-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. டயாலிசிஸ் செய்ய 3 மிஷின்கள் உள்ளன. மருத்துவப் பிரிவில் 2 பேராசிரியர்கள் மட்டுமே உள்ளனர். அதனால், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனால், சிறுநீரகம் செயலிழந்த நிலையில் சிகிச்சைக்கு வரும் சுமார் 100 குழந்தைகள் ஆண்டுதோறும் உயிரிழக்கின்றனர். இந்த சோகம் கடந்த 28 ஆண்டுகளாக தொடர்வது வேதனை’’ என்றனர்.
‘விரைவில் தொடங்கப்படும்’
இதுதொடர்பாக சுகாதாரத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘எழும்பூர் குழந்தை கள் மருத்துவமனை சிறுநீரகவியல் துறையில் தேவையான டாக்டர்கள், நர்ஸ்கள் நியமிக்கப்படுவார்கள். குழந்தைகளுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான ஆபரேஷன் தியேட்டர் உள்ளிட்ட வசதிகள் விரைவில் தொடங்கப்படும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT