Published : 12 Jan 2017 12:02 PM
Last Updated : 12 Jan 2017 12:02 PM
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அரசுடமையாக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.
தமிழக பொதுநலன் வழக்கு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் கே.கே.ரமேஷ் தாக்கல் செய்த இந்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் புகழேந்தி, "பொதுநல வழக்குகள் எவ்வாறு தாக்கல் செய்ய வேண்டும், எது சம்பந்தமாக பொதுநல வழக்கு தாக்கல் செய்யலாம் என உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் உள்ளது. ஜெயலலிதாவின் சொத்துகள் அவர் சினிமாவில் இருந்தபோது சம்பாதித்தது. அந்த வகையில் மனுதாரரின் மனு ஏற்புடையதல்ல" என வாதிட்டார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், "தனிநபர் சார்புடைய வழக்குகளை பொதுநல வழக்காக தாக்கல் செய்ய முடியாது என உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் உள்ளது. இந்த வழக்கை ஏற்க முடியாது" எனத் தெரிவித்தனர்.
மனு விவரம்:
"தமிழக பொதுநலன் வழக்கு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் கே.கே.ரமேஷ் உயர் நீதிமன்ற கிளையில் புதன்கிழமை தாக்கல் செய்த மனுவில், “ஜெயலலிதா கடந்த 2016-ல் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது, அவர் தாக்கல் செய்த சொத்துக் கணக்கில், தனக்கு ரூ.10,63,83,945 வங்கி டெபாசிட், ரூ.27,44,55,450 மதிப்புள்ள முதலீட்டு பத்திரங்களும், ரூ.41,63,55,395 மதிப்புள்ள நகைகளும், ரூ.72,09,83,190 மதிப்புள்ள அசையா சொத்துகள் மற்றும் வாகனங்களும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவுக்கு நேரடி வாரிசு யாரும் இல்லை. அவருக்கு தமிழகம், கர்நாடகா, ஆந்திராவில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் அசையும் மற்றும் அசையா சொத்துகள் உள்ளன. ஜெயலலிதாவின் சொத்துகள் அனைத்தையும் அரசுடமையாக்கி, அந்த சொத்துகளில் இருந்து வரும் வருமானத்தை ஜெயலலிதாவின் விருப்பத்தின்படி ஏழைகளின் நலனுக்காக செலவிட வேண்டும்.
உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைக்கவும், அந்த குழு ஜெயலலிதாவின் அசையும், அசையா சொத்துகளை கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்யவும், பின்னர் அனைத்து சொத்துகளையும் அரசுடமையாக்கவும், அந்த சொத்துகளை நிர்வகிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியை நியமிக்கவும் உத்தரவிட வேண்டும்"
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT