Published : 11 Sep 2016 09:32 AM
Last Updated : 11 Sep 2016 09:32 AM

இன்று மகாகவி பாரதி நினைவு தினம்: பாரதியின் வீட்டுக்கு 33 ஆண்டுகளாக மாட்டு வண்டியில் சென்ற விளைபொருட்கள்

வீட்டில் தங்கி படிக்க உதவியதற்கு நன்றிக்கடன் காட்டிய மாணவர்

மகாகவி சுப்பிரமணிய பாரதி வாழ்ந்த காலகட்டத்தில் பள்ளி களில் தங்கி படிப்பதற்கு விடுதி, சாப்பிடுவதற்கு மதிய உணவு, பஸ் வசதி கிடையாது. மாணவர்கள் உறவினர் வீடுகளில் தங்கியிருந்தும், பல கி.மீ. தொலைவு நடந்து சென் றும் பள்ளிகளில் படிப்பது வழக் கம். பண்ணையார், பெரும் நிலச் சுவான்தாரர் வீட்டுக் குழந்தைகள் மாட்டுவண்டி, குதிரை வண்டிகளில் பள்ளிக்குச் சென்று படித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத் திகுளம் அருகே வாதலகரை கிராமத்தைச் சேர்ந்த பண்ணையார் பாப்பு ரெட்டியாரின் மகன் காமு ரெட்டியார் என்பவர், எட்டயபுரத்தில் பாரதியின் வீட்டில் தங்கியிருந்து அங்கு உள்ள ராஜா உயர்நிலைப் பள்ளியில் படித்துள்ளார். பாரதியின் வீட்டில் தங்கி படிக்க உதவி செய்ததற்கு நன்றியாக அவரது மறைவுக்குப் பின், காமு ரெட்டியார், பாரதியின் மனைவி செல்லம்மாளுக்கு 33 ஆண்டுகளாக மாட்டு வண்டியில் சாப்பாட்டுக்குத் தேவையான விளைபொருட்களை அனுப்பி வைத்துள்ளார்.

இந்தத் தகவலை செல்லம்மாள், காமு ரெட்டியாருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதத்தை காமு ரெட்டியாரின் வாரிசுகள் தற்போது பாதுகாத்து வருகின்றனர். இந்த கடிதத்தின் நகலை வைத்துள்ள காமு ரெட்டியாரின் வாதலகரை ஊரைச் சேர்ந்த மதுரை பராசக்தி நகரில் வசிக்கும் ஓய்வுபெற்ற விமானப்படை வீரர் எம்.எஸ்.சேகர் கூறியதாவது:

காமு ரெட்டியாரின் மகனும், நானும் ஒன்றாகத்தான் படித்தோம். காமு ரெட்டியாரை 1915-16ம் ஆண்டு காலகட்டத்தில் எட்டயபுரத்தில் உள்ள ராஜா உயர்நிலைப் பள்ளியில் சேர்க்க அவரது தந்தை பாப்பு ரெட்டியார் அழைத்துச் சென்றுள்ளார். எட்டயபுரத்தில் இருந்து வாதலகரை 40 கி.மீ. தூரத்தில் இருந்ததால் அவ்வளவு தூரம் தினமும் மகனை அனுப்ப பாப்பு ரெட்டியாருக்கு விருப்பம் இல்லை. எட்டயபுரத்தில் அவரது உறவினர்கள் வீடும் இல்லை.

அப்போது எட்டயபுரம் சுற்று வட்டாரத்தில், எல்லோருக்கும் பரிச்சயமானவர் சுப்பிரமணிய பாரதிதான். பாரதியை சந்தித்த பாப்பு ரெட்டியார் மகன் படிப்ப தற்கு எட்டயபுரத்தில் தங்க வைக்க இடமில்லை என்று தெரிவித்துள் ளார். படிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் அவரது மகனை அழைத்து வந்ததால் காமு ரெட்டியாரை தன்னுடைய வீட்டிலே தங்கி பள்ளியில் படிக்கும்படி பாரதி கூறியுள்ளார். காமு ரெட்டி யார் பாரதியின் வீட்டில் தங்கி படித் துள்ளார். காமு ரெட்டியார் பெரும் பண்ணையார் என்பதால் 10-ம் வகுப்பு முடித்தவுடன் விவசாயம் பார்க்க ஆரம்பித்துவிட்டார்.

இந்நிலையில், பாரதி 1921-ம் ஆண்டு செப். 11-ம் தேதி மறைந்தார். அதிர்ச்சியடைந்த காமு ரெட்டியார், எட்டயபுரத்தில் பாரதியின் வீட்டுக்கு துக்கம் விசாரிக்கச் சென்றுள்ளார். அப்போது, பாரதியின் குடும்பச் சூழல் மிகவும் மோசமாக இருந் துள்ளது. மிகவும் மனம் வருந்திய காமு ரெட்டியார், பாரதியின் மனைவி செல்லம்மாளிடம், உங்கள் வீட்டுக்கு சாப்பாட்டுக்கு தேவை யான விளைபொருட்களை எனது விளைநிலத்தில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் அனுப்பி வைக்கிறேன் என உறுதி அளித்துள்ளார். அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும், காமு ரெட்டியார் தான் இறக்கும் வரை தன்னுடைய வீட்டில் இருந்து மாட்டுவண்டியில் விளை பொருட்களை 33 ஆண்டுகளாக எட்டயபுரத்தில் உள்ள பாரதியின் குடும்பத்துக்கு அனுப்பி வந்துள்ளார்.

1954-ம் ஆண்டு காமு ரெட்டியார் இறந்தபின் அவரது வீட்டில் இருந்து விளைபொருட்கள் செல்லவில்லை. அதனால், பாரதியின் மனைவி செல்லம்மாள், காமு ரெட்டியார் இறந்தது தெரியாமல் அவருக்கு கடிதம் அனுப்பி ஏன் வழக்கம்போல் அனுப்பும் விளைபொருட்களை அனுப்பவில்லை என கேட்டுள்ளார்.

அந்த கடிதத்தில் செல்லம்மாள், இவ்விடம் குழந்தைகள் சவுக்கியம், அதுபோல உன் குழந்தைகள், மற்ற யாவரும் சவுக்கியம் என நினைக்கிறேன். நீ சொன்னபடி, மகசூலும், விறகும் வரவில்லை. மறந்துவிடாமல் தயவு செய்து அனுப்பவும். நீ குழந்தைகள், குடும்பத்தை அழைத்துக் கொண்டு கட்டாயம் புறப்பட்டு வா. எனக்கு உன் குழந்தைகளை பார்க்க வேண்டும்போல இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார். செல்லம்மாள் எழுதிய இந்த கடிதத்தை காமு ரெட்டியார் குடும்பத்தினர் தற்போது வரை பொக்கிஷம்போல பாதுகாத்து வருகின்றனர். நான் கடந்த முறை சொந்த ஊரான வாதலகரை சென்றபோது, அந்த கடிதத்தின் நகலை எடுத்து வந்தேன். வீட்டில் தங்கி படிக்க உதவி செய்த விசுவாசத்துக்காக ஒரு மாணவர், 33 ஆண்டுகளாக பாரதியின் வீட்டுக்கு விளைபொருட்களை அனுப்பியது, அவருக்கு பாரதி மீது இருந்த பற்றை எடுத்துக்காட்டுகிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x