Published : 29 Jun 2016 05:22 PM
Last Updated : 29 Jun 2016 05:22 PM
முன்னாள் அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயத்தை கொலை செய்தவர்களைக் கண்டுபிடிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு மேலும் 6 வார காலம் அவகாசம் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ராமஜெயம், கொலை வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. இந்த வழக்கு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வந்தபோது, சிபிசிஐடி போலீஸார் ராமஜெயம் கொலை தொடர்பான ரகசிய அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதில், குற்றவாளிகளை நெருங்கிவிட்டதாகவும், விரைவில் கைது செய்துவிடுவோம். எனவே, கொலையாளிகளை பிடிக்க மேலும் 4 மாதம் அவகாசம் அளிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
ஆனால், ராமஜெயம் தரப்பில் இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் எனக் கோரப்பட்டது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் கே.செல்லப்பாண்டியன் வாதிடும் போது, சிபிசிஐடி போலீஸார் சரியான பாதையில் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் எனவே வழக்கை சிபிஐக்கு மாற்றத் தேவையில்லை என்றும் கூறினார்.
அப்போது நீதிபதி தேவதாஸ், இந்த வழக்கில் சிபிசிஐடி கோரியபடி மேலும் 4 மாதம் அவகாசம் அளித்தாலும் ஆமை வேகத்தில் விசாரணை மேற்கொள்ளப்படும். எனவே, சிபிசிஐடி போலீஸுக்கு கூடுதலாக 6 வாரம் மட்டுமே அவகாசம் அளிக்கப்படுகிறது எனக் கூறி வழக்கை ஒத்தி வைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT