Published : 26 Jul 2016 07:45 AM
Last Updated : 26 Jul 2016 07:45 AM
காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே குறுகிய தெருக்களில் கனரக வாகனத்தில் குடிநீர் விநியோகிக்கப்படுவதால் போக்கு வரத்து இடையூறு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித் துள்ளனர்.
சென்னை குடிநீர் வாரியம் சார்பில் சென்னை மாநகர மக்களுக்கு குழாய்கள் மூலமும், லாரி மூலமும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும் பராமரிப்பு பணிகள் காரணமாக பொதுமக்கள் அழைப்பின் பேரிலும் லாரிகளில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
குறுகலான தெருக்களுக்குள் கனரக லாரிகள் செல்ல முடிவதில்லை. அவ்வாறு சென்றாலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் சிறிய வாகனங்களில் குடிநீர் தொட்டிகளை பொருத்தி, அதன்மூலம் குடிநீர் விநியோகிக்க சென்னை குடிநீர் வாரியம் முடிவு செய்தது. கடந்த செப்டம்பர் மாதம் முதல் குறுகிய தெருக்களில் சிறிய வாகனங்களில் குடிநீர் வழங்கும் சேவையை தொடங்கியிருப்பதாகவும், அதனால் குறுகலான தெருக்களில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்பட்டிருப்பதாகவும் குடிநீர் வாரியம் அறிவித்திருந்தது.
முதல்வர் ஜெயலலிதாவின் ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட, காசிமேடு மீன்பிடி துறைமுகத்துக்கு அருகில் உள்ள புதுமனைக்குப்பம் 1-வது தெருவை மீன்பிடி துறைமுகத்துக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் சிறு மீன் வியாபாரிகள் பயன்படுத்தி வருகின்றனர். இத்தெரு சுமார் 20 அடி அகலம் மட்டுமே கொண்டது.
இந்நிலையில், இத்தெருவில் குடிநீர் வாரியத்தின் மூலம் கனரக லாரிகளிலேயே தொடர்ந்து குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதனால் குடிநீர் விநியோகத்தின்போது, அந்த தெருவில் செல்லும் பொதுமக்களும், சிறு மீன் வியாபாரிகளும் அவதிப்பட்டு வருகின்றனர். துறைமுகத்துக்கு செல்லவும் முடியாமல், துறைமுகத்திலிருந்து வெளியில் வரவும் முடியாமல் தவிக்கின்றனர்.
இதுதொடர்பாக பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சவுந்தர் கூறும்போது, “குடிநீர் கனரக லாரியால் தினமும் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது. மாற்று வழியில் செல்ல வேண்டு மென்றால் சுற்றிக்கொண்டு செல்ல வேண்டியுள்ளது. எனவே இதுபோன்ற குறுகிய தெருக்களில் சிறு வாகனங்கள் மூலம் குடிநீர் விநியோகிக்க வேண்டும்” என்றார்.
இது தொடர்பாக குடிநீர் வாரிய அதிகாரியிடம் கேட்டபோது, “சிறு வாகனத்தில் குடிநீர் கொண்டு சென்றால், அடிக்கடி குடிநீர் பிடிக்க வரமுடியாது என்று பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பெரிய லாரியில்தான் குடிநீரை கொண்டுவர வேண்டும் என்று நிர்ப்பந்திக்கின்றனர். இருப்பினும் குறுகிய தெருக்களில், சிறு வாகனங்களில் குடிநீர் விநியோகிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT