Published : 01 Jun 2017 11:22 AM
Last Updated : 01 Jun 2017 11:22 AM
கடந்த ஒரு ஆண்டாக அரசியல் நெருக்கடிகள், சவால்களை சமாளித்து நல்ல பல திட்டங்களை செயல்படுத்தி மதுரையின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட இளம் மாநகராட்சி ஆணையர் சந்தீப் நந்தூரி, திருநெல்வேலி ஆட்சியராக மாறுதலாகி செல்வதால், மதுரை மக்கள் அவருக்கு சமூக வலைதளங்களில் உருக்கமான பிரியா விடை கொடுத்து வருகின்றனர்.
சென்னைக்கு அடுத்து தமிழகத்தின் இரண்டாவது பெரிய மாநகராட்சி மதுரை. கிராமங்கள் நிறைந்த பழமையான இந்த மாநகராட்சியின் ஆணையாளராக பதவி வகிப்பது சவால்கள் நிறைந்தது. சாதாரண வட்டச் செயலாளர்களில் ஆரம்பித்து கவுன்சிலர்கள், எம்எல்ஏ-க்கள், அமைச்சர்கள் வரை பல்வேறு அரசியல் நெருக்கடிகளை சந்திக்க வேண்டி இருக்கும். இத்தனையையும் சமாளித்து மதுரைக்கு நல்ல பல திட்டங்களை செயல்படுத்தி, வளர்ச்சிக்கான அடித்தமிட்டு சாதித்துள்ளார் மதுரை மாநகராட்சியின் இளம் ஆணையாளராக இருந்த சந்தீப் நந்தூரி. அதற்கு பரிசாக, தற்போது தமிழக அரசு அவரை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக நியமித்துள்ளது.
அது ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும், மற்றொரு புறம் அவர் மதுரையைவிட்டு விட்டுசெல்வது இங்குள்ள மக்களை வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது. அந்தளவுக்கு அவர் மக்களோடு மிக நெருக்கமாக இருந்துள்ளார். 2016-ஆம் ஆண்டு ‘ஸ்மார்ட் சிட்டி’ பட்டியலில் மதுரை இடம்பெற முடியாமல் மக்கள் ஏமாற்றமடைந்த நேரத்தில் மாநகராட்சி ஆணையாளராக சந்தீப் நந்தூரி பொறுப்பேற்றார். அப்போது அவர் ‘‘என்னுடைய முதல் திட்டம், ஸ்மார்ட் சிட்டியில் மதுரையை இடம்பெற வைப்பதுதான்,’’ என்றார். அவர் கூறியபடி அடுத்த சில மாதத்திலே மதுரையை ‘ஸ்மார்ட் சிட்டி’ பட்டியலில் இடம்பெற செய்தார்.
அதன்பின், மதுரை மாநகரின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் ஆர்வம் காட்டினார். வைகை ஆற்றில் சாக்கடை நீரும், கழிவுநீரும் கலப்பதை தடுக்க ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் வைகை ஆற்றில் கலாச்சார திருவிழாக்கள் கொண்டாடும் வகையில் ரூ.50 கோடியில் கலாச்சார மண்டலமாக அறிவித்தார். ‘வாட்ஸ் அப்’பில் பொதுமக்கள் புகார் தெரிவித்தால், சில நிமிடங்களில் சம்பந்தப்பட்ட மண்டல மாநகராட்சி ஊழியர்கள், புகார் தெரிவித்தவரை தேடிச் சென்று அப்பிரச்சனைக்கு தீர்வுகாணும் திட்டத்தை செயல்படுத்தினார். இதற்காக அவர் மத்திய அரசின் சிறந்த மாநகராட்சி ஆணையாளர் விருதைப் பெற்றார்.
மாநகராட்சி வாகனங்களில் ஜி.பி.ஆர்.எஸ். கண்காணிப்பை நடைமுறைப்படுத்தி உள்ளாட்சி அமைப்புகளில் நவீன செயல்பாடுகளுக்கான ‘ஸ்காச் கோல்ட்’ விருதை பெற்றார். பொதுசுவர்களில் பள்ளி குழந்தைகளை கண்ணை கவரும் ஓவியங்களை வரைய வைத்து, நகரை அழகாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். மக்கும், மக்கா குப்பைகளை பொதுமக்களே பிரித்து, அவற்றை துப்புரவு தொழிலாளர்களிடம் வழங்கும் திட்டத்தை தொடங்கினார்.
மீனாட்சி கோயில் பகுதியில் கடந்த ஜனவரி முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழித்தார். நீதிமன்ற உத்தரவை சாதகமாக பயன்படுத்தி நீண்டகால ஆக்கிரமிப்புகளை அகற்றினார். மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று நகரின் முக்கிய சாலையில் குறிப்பிட்ட நேரம் ஒட்டுமொத்த போக்குவரத்தையும் நிறுத்தி ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ பொழுதுபோக்கு நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தினார்.
புதர் மண்டிக் கிடந்த பூங்காக்களை கணக்கெடுத்து, அவற்றை அழகுப்படுத்த நடவடிக்கை எடுத்தார். மாநகராட்சி குடோன்களில் பயன்பாடில்லாமல் கிடந்த 12 டன் இரும்புக் கழிவுகளை கொண்டு அழகழகான சிற்பங்களாக வடிவமைத்து, அவற்றை பூங்காக்களில் வைக்கும் திட்டத்தை தமிழகத்திலே முதல் முறையாக அறிமுகப்படுத்தினார். யாரையும் எந்நேரமும் சந்திக்கும் அவரது எளிமையான அணுகுமுறையாலும், தமிழும், ஆங்கிலமும் கலந்த அவரின் கண்ணியமான பேச்சால், மதுரை மக்களின் இதயங்களில் இடம் பிடித்தார். அதனால், கடந்த காலத்தில் மதுரை மக்களிடம் பெயரெடுத்த உதயசந்திரன், சகாயம், அன்சூல் மிஷ்ரா வரிசையில் சந்தீப் நந்தூரியும் இடம்பெற்று சாதித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT