Published : 20 Jan 2014 08:00 AM
Last Updated : 20 Jan 2014 08:00 AM
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபல திரைப்பட பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு (67) உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்பினார்.
ஜொகன்னஸ்பர்க் நகரில் சர்வதேச இந்திய திரைப்பட விழா (ஐஎப்எப்எஸ்ஏ) சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் எஸ்.பி.பி.க்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. ஒரு பாடலின் ஒரு வரியை 15 மொழிகளில் பாடியபடி விருதைப் பெற்றதும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
எனினும், அவருக்கு என்ன பிரச்சினை ஏற்பட்டது என்பது தெரியவில்லை. இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை அவர் நாடு திரும்புவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். எஸ்பிபியுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர் நாடு திரும்பியதால் விருந்து நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
இந்திய மற்றும் தென்னாப்பிரிக்க திரைப்படத் துறையினரிடையே கலாச்சார உறவை வளர்ப்பதற்காக ஐஎப்எப்எஸ்ஏ நடத்தப்படுகிறது. இவ்விழாவின்போது, இரு நாடுகளைச் சேர்ந்த வட்டார மொழி திரைப்படங்களுக்காக பல்வேறு பிரிவுகளின் கீழ் விருது வழங்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT