Published : 30 Jul 2016 04:01 PM
Last Updated : 30 Jul 2016 04:01 PM
சென்னையில் இருந்து 40 கி.மீ. தொலைவில், மாமல்லபுரத்தில் இருக்கிறது சென்னை முதலைப் பண்ணை. முதலைகள் அழிந்து வந்த நிலையில், அவற்றின் எண்ணிக்கையைப் பெருக்கும் பொருட்டு 1976-ல் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. முதலைப் பண்ணையை ஆரம்பித்து 40 வருடங்கள் ஆன நிலையில், தன்னுடைய அனுபவங்களைப் பகிர்கிறார் பண்ணையின் நிறுவனரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான ரோமுலஸ் விட்டேகர்.
இது குறித்து நம்மிடம் பேசியவர், ''சென்னை பாம்புப் பண்ணையின் ஒரு கிளையாக, சென்னை முதலைப் பண்ணையை ஆரம்பித்தோம். முதலைகளின் இனப்பெருக்கத்தை அதிகப்படுத்த வேண்டும் என்பதே எங்களின் எண்ணமாக இருந்தது. முதலைகளின் மூன்று முக்கிய இனங்களையுமே பெருக்க ஆசைப்பட்டோம். எங்களின் முயற்சி வெற்றி பெற்றிருக்கிறது. 14 முதலைகளோடு தொடங்கிய எங்களின் பயணம் இன்று 17 இன வகைகளோடு 2,300 முதலைகளில் வந்து நிற்கிறது.
நான் அமெரிக்காவில் பாம்பு வளர்ப்பிடத்தில் பார்த்த வேலை, இங்கே பண்ணையைத் துவக்க உதவியாக இருந்தது. அங்கிருந்துதான் எனக்கு முதலைகளின் மேல் ஈடுபாடு ஏற்பட்டது. முதலையை எப்படிப் பிடிக்க வேண்டும், அதற்கு எப்படி உணவு கொடுக்க வேண்டும், அதை எப்படி கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதைக் கற்றதெல்லாம் அங்கேதான்.
முதலைகளில் பல வகைகள் இருக்கின்றன. மீன்களை அதிகம் உண்ணும் கரியல் வகை, உவர்நீர் முதலைகள், சதுப்பு நில முதலைகள் ஆகியவை அவற்றில் முக்கியமானவை. கரியல் வகை முதலைகள் சம்பல் நதியில் அதிகம் காணப்படுகின்றன. குஜராத்தைச் சுற்றியுள்ள நீர்ப்பகுதிகளில் அதிக முதலைகள் உண்டு. ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் உவர்நீர் முதலைகள் அதிகம்.
நாடு முழுக்க பரந்து விரிந்திருந்த முதலைகளை இங்கே பாதுகாப்பாக கொண்டு வந்து சேர்த்திருக்கிறோம். இங்கே முதலைப் பண்ணையில் ஆராய்ச்சி நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. அந்தமான் தீவுகளிலும், சம்பல் நதியிலும் கள ஆய்வு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது சுற்றுச்சூழல் சார்ந்த நிகழ்வு மட்டுமல்ல. வரலாற்றை நம் நினைவடுக்குகளின் வழியாகப் பார்க்கும் பயணம்.
ஆகஸ்ட் 28-ம் தேதி அன்று 40-ம் ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறோம். நாங்கள் என்ன செய்திருக்கிறோம் என்பதை மக்களுக்குக் காண்பிக்க உள்ளோம். முதலைப் பண்ணை உருவாகக் காரணமாக இருந்தவர்களுக்கும், பராமரிப்புக்கு உதவியவர்களுக்கும் நன்றி செலுத்துகிறோம். சென்னைக்கு வருகை தருபவர்கள் அனைவரும் சென்னை முதலைப் பண்ணையையும் காண வேண்டும்'' என்கிறார்.
சென்னை முதலைப்பண்ணையின் வலைத்தள முகவரி: >http://www.madrascrocodilebank.org/
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT